search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    போக்சோ வழக்கில் கைதான உடற்கல்வி ஆசிரியருக்கு ஆதரவாக மாணவ, மாணவிகள் போராட்டம்
    X

    போக்சோ வழக்கில் கைதான உடற்கல்வி ஆசிரியருக்கு ஆதரவாக கோவை-சிறுவாணி சாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளை காணலாம்

    போக்சோ வழக்கில் கைதான உடற்கல்வி ஆசிரியருக்கு ஆதரவாக மாணவ, மாணவிகள் போராட்டம்

    • போலீசார் ஆனந்தகுமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
    • மாணவ, மாணவிகள் அனைவரும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கோவை:

    கோவை ஆலாந்துறையில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இந்த பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ளது. இங்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 820 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளியில் கவுண்டம்பாளையம் அடுத்த வடிவேலம்பாளையத்தை சேர்ந்த ஆனந்தகுமார் (வயது36) என்பவர் உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இந்த நிலையில் அந்த பள்ளியில் படிக்கும் 9-ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு இவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.

    இதையடுத்து, போலீசார் ஆனந்தகுமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை கைது செய்யப்பட்ட ஆசிரியர் ஆனந்தகுமாருக்கு ஆதரவாக ஆலாந்துறை அரசு பள்ளியை சேர்ந்த 800-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பள்ளி எதிரே உள்ள சிறுவாணி சாலையில் திரண்டனர்.

    பின்னர் மாணவ, மாணவிகள் அனைவரும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, ஆசிரியர் ஆனந்தகுமார் மீது பொய் புகார் கூறப்பட்டுள்ளது. அவர் மிகவும் நல்லவர்.

    அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும் என கூறி கோஷங்களை எழுப்பியபடியே இருந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

    இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஆலாந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராணி தலைமையிலான போலீசார் மற்றும் பள்ளி தலைமை யாசிரியர்(பொறுப்பு) கார்த்திகேயன் ஆகியோர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ஆனால் மாணவ, மாணவிகள் ஆசிரியரை உடனே விடுவிக்க வேண்டும் என்று கூறியபடியே போராட்டத்தை கைவிட மறுத்து கோஷங்களை எழுப்பி கொண்டிருந்தனர்.

    இதனால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. தொடர்ந்து மாணவ, மாணவிகள் அனைவரும் அங்கிருந்து எழுந்து 1 கி.மீ தூரம் நடந்து சென்றனர்.

    இதனால் சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன. இதன் காரணமாக அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதற்கிடையே சம்பவம் பற்றிய தகவல் கிடைத்ததும், பேரூர் டி.எஸ்.பி ராஜபாண்டியன் அங்கு விரைந்து வந்தார்.

    அவர் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் மாணவர்கள் அனைவரையும் அங்கிருந்து நேராக பள்ளி வளாகத்திற்கு அழைத்து செல்ல முயன்றார்.

    அப்போது மாணவர்கள் பள்ளிக்குள் வர மறுத்தனர். போலீசார் ஆசிரியர்கள் உதவியுடன் மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்தனர். அப்போது அங்கு சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    ஒருவழியாக மாணவர்களை உள்ளே அழைத்து சென்ற போலீசார் அவர்களை பள்ளி வளாகத்தில் அமர வைத்தனர். அவர்களுக்கு பேரூர் டி.எஸ்.பி. அறிவுரைகளை வழங்கினார்.

    மாணவர்களின் போராட்டத்தை பார்த்த அப்பகுதி மக்கள், ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்தனர்.

    இதற்கிடையே இந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் 7 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

    இவர்கள் போராட்டத்தை தூண்டி விட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதன் காரணமாகவே அவர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×