search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னை தங்கசாலையில் 1 கி.மீ. நீளத்துக்கு பிரமாண்ட நடைபயிற்சி, மூலிகை பூங்கா
    X

    சென்னை தங்கசாலையில் 1 கி.மீ. நீளத்துக்கு பிரமாண்ட நடைபயிற்சி, மூலிகை பூங்கா

    • பூங்கா 3.4 ஏக்கர் நில பரப்பளவில் அமைக்கப்பட்டு வருகிறது.
    • 3 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் மரக்கன்றுகள் நடப்பட்டு உள்ளன.

    சென்னை:

    சென்னை தங்கசாலையில் பிரமாண்ட நடைபயிற்சி பாதை, மூலிகை பூங்கா அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இந்த பூங்கா திறக்கப்பட உள்ளது.

    வடசென்னை தங்கசாலை மேம்பாலம் அருகே சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் அடர்வன காடுகளுடன் கூடிய பிரமாண்ட நடை பயிற்சி பாதை,மூலிகை பூங்கா அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.இந்த பூங்கா 3.4 ஏக்கர் நில பரப்பளவில் அமைக்கப்பட்டு வருகிறது.

    இதில் பொதுமக்கள் வாக்கிங் செல்வதற்காக 1 கி.மீட்டர் நீளத்துக்கு நடை பயிற்சி பாதைகள்,சிறுவர்களுக்காக உடற்பயிற்சி கூடம், அடர்வனம் (மியாவாக்கி) பூங்கா, தியானமண்டபம் நுழைவு பிளாசா, மூலிகை காடுகள், பெண்கள் உடற்பயிற்சி மையம், கூழாங்கல் நடை பாதை உருவாக்கப்பட்டு வருகிறது. இதில் பசுமை பூங்கா 1550 ச.மீ., யோகா கூடம் 1250 ச.மீ, திறந்த ஜிம்-800 ச.மீ, பார்க்கிங் 400 ச.மீட்டர் ஆகியவை அமைக்கப்படுகிறது.

    இந்த பூங்காவில் வேம்பு, புங்கை, மருது, மூங்கில், பாதாம், இலுப்பை, மாமரம், அரசமரம், செண்பகம், மகிழம், உள்பட 1000- க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது.

    3 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் மரக்கன்றுகள் நடப்பட்டு உள்ளன. மேலும், சிறுவர் விளையாட்டுதிடல், தியானமண்டபம், திறந்தவெளி கூடம் அமைக்கப்பட்டு வருகிறது.பொதுமக்களுக்கான உடற்பயிற்சி கூடம், நடைபயிற்சி பாதைகள் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    வடசென்னை தங்கசாலை மேம்பாலம் அருகில் பொதுமக்கள் வசதிக்காக பிரமாண்ட நடைபயிற்சி பாதைகளுடன் பூங்கா அமைக்கப்படுகிறது. பூங்காவில் எல்இடி விளக்குகள், நவீன இருக்கைகள் அமைய உள்ளது. ஆண்கள், பெண்கள். குழந்தைகள் மற்றும் முதியோருக்கான கழிப்பறை வசதி,குடிநீர் வசதி செய்யப்படுகிறது.

    சிறுவர், சிறுமிகளை மகிழ்விக்கும் வகையில் விளையாட்டு சாதனங்களுடன் கூடிய விளையாட்டு திடல் ஏற்படுத்தப்படுகிறது. கூழாங்கல் 8 வடிவ நடை பயிற்சி பாதை மற்றும் தடுப்பு கம்பிகளுடன் கூடிய சுற்று சுவர்கள் அமைக்கப்படுகிறது.

    இந்த பூங்கா பணிகள் மிக வேகமாக தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும். இந்த பூங்காவில் அடர்வன காடுகள் அமைக்கப்படுவதால் அதிக அளவு ஆக்சிஜன் உற்பத்தி கிடைக்கும்.இந்த பகுதியில் இதன்மூலம் சுற்றுச் சூழல் மாசு குறையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×