search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    சென்னையில் மகளிர் உரிமைத் தொகை வழங்க 17.16 லட்சம் விண்ணப்பங்கள் தயார்
    X

    சென்னையில் மகளிர் உரிமைத் தொகை வழங்க 17.16 லட்சம் விண்ணப்பங்கள் தயார்

    • நாளை முதல் விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன் அதற்கான அடையாள சான்று ஆகியவை கடை பணியாளர் மூலம் வீடுகளுக்கு வினியோகிக்கப்படும்.
    • தகுதி உள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும்.

    சென்னை:

    கலைஞர் மகளிர் உரிமை திட்டம் செயல்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் இன்று நடந்தது. கமிஷனர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்த கூட்டத்தில் கலெக்டர் அருணா, போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    திட்டத்தை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பது குறித்து கமிஷனர் விளக்கி கூறினார். அனைத்துத் துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    பின்னர் மாநகராட்சி கமிஷனர் ராதா கிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை 2 கட்டமாக பிரித்து வழங்கப்படுகிறது. 200 வார்டுகளில் முதலில் 98 வார்டுகளுக்கு முதல் கட்டமாகவும் 102 வார்டுகளுக்கு 2-வது கட்டமாகவும் விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.

    நாளை முதல் விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன் அதற்கான அடையாள சான்று ஆகியவை கடை பணியாளர் மூலம் வீடுகளுக்கு வினியோகிக்கப்படும். தகுதி உள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும். முடிந்த வரை குடும்பத்தில் உள்ளவர்கள் பூர்த்தி செய்யலாம்.

    விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய சிறப்பு முகாம்கள் எந்தெந்த நாட்களில் நடைபெறுகிறது என்ற விவரம் அந்தந்த ரேசன் கடைகளில் அடுத்த 3 நாட்களில் ஒட்டப்படும். முகாம் எங்கு நடக்கிறது என்ற விவரம் டோக்கன் மூலம் தெரியப்படுத்தப்படும்.

    அதனால் யாருக்கும் கிடைக்காமல் போய் விடும் என்ற பதட்டம், அச்சம் தேவையில்லை. சென்னையில் வீடு வீடாக விண்ணப்பம் வழங்க 17.16 லட்சம் விண்ணப்பங்கள் தயார் நிலையில் உள்ளன. இது தவிர கூடுதலாக ஒரு சதவீதம் விண்ணப்பங்கள் கையிருப்பு வைக்கப்பட்டு உள்ளன.

    தேவையற்ற சான்றிதழை விண்ணப்ப படிவத்தோடு இணைக்க வேண்டாம். தெருவோரம் வசிப்பவர்கள், 3 மாவட்ட எல்லை முறையாக கணக்கிடப்பட்டு யார்-யாருக்கு எந்தெந்த பகுதி வரும் என்று கலெக்டர்கள் மூலம் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு ரேஷன் கடை மூலம் தொடங்க ஏற்பாடு செய்யப்படும். மாநகராட்சியோடு காவல் துறை, கூட்டுறவு துறை இணைந்து இந்த பணியை மேற்கொள்கின்றன.

    3473-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மகளிர் உரிமை தொகை வழங்கும் பணியில் ஈடுபடுகிறார்கள். முகாம்கள் நடைபெறும் இடத்தில் தேவையான வசதிகள் ஏற்படுத்தப்படும். முகாம் மையங்களுக்கு பயோமெட்ரிக் உள்ளிட்ட கருவிகள் அனுப்பப்பட்டுள்ளன.

    சென்னையில் உள்ள 1428 ரேஷன் கடைகளில் முதல் கட்டமாக 703-ம், 2-வது கட்டத்தில் 725-ம் பிரித்து பணிகள் மேற்கொள்ளப்படும். 500 ரேஷன் கடைகளுக்கு ஒரு தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    523 பகுதிகளில் இந்த பணி நடைபெறுகிறது. அதனால் போலீஸ் பாதுகாப்பும் போடப்படுகிறது. 702 உதவி மையங்களும் செயல்படுகின்றன. மொத்தம் 2500 தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ரத்தோர் கூறும்போது, "சென்னை மாநகராட்சி மூலம் இந்த திட்டப் பணிக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்கப்பட்டுள்ளது. மாநகர போலீஸ், ஆயுதப்படை போலீஸ், தமிழ்நாடு சிறப்பு படை ஆகியவை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும். தேவைப்பட்டால் ஊர்க்காவல் படையை இதில் ஈடுபடுத்துவோம். கூட்டம் இருக்க வாய்ப்பு இல்லை. ஆனாலும் பொதுமக்களுக்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்படும்" என்றார்.

    Next Story
    ×