search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னையில் மாநகர பஸ்களில் தினமும் 31 லட்சம் பேர் பயணம்
    X

    சென்னையில் மாநகர பஸ்களில் தினமும் 31 லட்சம் பேர் பயணம்

    • மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் தினமும் 3200 பஸ்கள் இயக்கப்படுகின்றன.
    • ஊரடங்கின் போது நிறைய பேர் இரு சக்கர வாகனத்துக்கு மாறினர்.

    சென்னை:

    சென்னை மற்றும் புறநகர் மக்களின் அன்றாட வாழ்க்கையில் மாநகர பஸ், மின்சார ரெயில் சேவை முக்கிய அங்கம் வகிக்கிறது. மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் தினமும் 3200 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    கொரோனா பாதிப்புக்கு முன்பு வரை மாநகர பஸ்களில் தினமும் 32 லட்சம் பேர் பயணம் செய்தனர். கொரோனா தொற்றால் பயணிகள் எண்ணிக்கை பல லட்சம் குறைந்தது. ஊரடங்கு மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக பஸ்சில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை குறைந்தது. மேலும் ஊரடங்கின் போது நிறைய பேர் இரு சக்கர வாகனத்துக்கு மாறினர்.

    இயல்பு நிலை திரும்பிய பிறகு பஸ்களில் படிப்படியாக கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. ஆனாலும் பழைய நிலையை எட்டவில்லை. பள்ளி, கல்லூரிகள், தனியார் அலுவலகங்கள், முழுமையாக செயல்பட தொடங்கிய பிறகும் கூட 27 லட்சம் பேர் வரை மட்டுமே பயணம் செய்தனர்.

    கடந்த மாதம் வரை இந்த நிலையே நீடித்தது. இந்த நிலையில் மாநகர பஸ்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை திடீரென உயர்ந்துள்ளது. தற்போது 31 லட்சம் பேர் பயணிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கொரோனாவுக்கு முந்தைய நிலையை தற்போது தான் எட்டி வருகிறது. இதுகுறித்து மாநகர போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    சென்னை மாநகர பஸ்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 10½ லட்சம் பெண்கள் மட்டும் இலவசமாக பயணம் செய்கிறார்கள். இந்த எண்ணிக்கை கடந்த மாதத்தில் 8 முதல் 9 லட்சமாக இருந்தது.

    தற்போது பெண்கள் அதிகளவில் பயணிக்க தொடங்கி உள்ளனர். 1,559 சாதாராண பஸ்களில் பெண்கள் தினமும் இலவசமாக பயணிக்கிறார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ் பயணத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    பயணிகளிடம் டிரைவர்கள், கண்டக்டர்கள் கனிவாக நடந்துகொள்ள வேண்டும். பேருந்து நிறுத்தங்களில் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×