search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மெரினாவில் 6-ந்தேதி நடைபெறும் விமான சாகச நிகழ்ச்சிக்கு 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
    X

    மெரினாவில் 6-ந்தேதி நடைபெறும் விமான சாகச நிகழ்ச்சிக்கு 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

    • கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிக்பாக்கெட், செயின் பறிப்பு போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை பிடிக்கவும் போலீசார் ரகசியமாக கண்காணிக்க உள்ளனர்.
    • விமான சாகச நிகழ்ச்சியையொட்டி 3 நாட்கள் ஒத்திகை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    சென்னை:

    இந்திய விமானப் படையின் 92-ம் ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் வருகிற 6-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) விமான சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    அன்று காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெறும் இந்த சாகச நிகழ்ச்சியை கண்டு களிப்பதற்காக மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கானோர் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த 2003-ம் ஆண்டு நடைபெற்ற விமான சாகச ஒத்திகையின் போது மெரினாவில் லட்சக்கணக்கானோர் திரண்டுள்ளனர். அதே போன்று வருகிற 6-ந்தேதி நடைபெற உள்ள விமான சாகச நிகழ்ச்சியை காண்பதற்கும் ஏராளமான பொதுமக்கள் கூடுவார்கள் என்பதால் பலத்த பாதுகாப்புக்கு போலீசார் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

    அன்றைய தினம் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த உயர் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். காணும் பொங்கல் தினத்தில் மேற்கொள்வது போன்று மெரினா கடற்கரை பகுதி முழுவதும் போலீசார் தீவிரமாக கண்காணிக்க உள்ளனர்.

    விமான சாகச நிகழ்ச்சியை கண்டு ரசிக்க வருபவர்கள் கடலில் இறங்கி குளிக்க வருகிற 6-ந்தேதி தடை விதிக்கப்பட உள்ளது.

    ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் காலையில் இருந்தே மக்கள் மெரினாவில் கூடுவார்கள் என்பதால் அவர்களை ஒழுங்குபடுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    மெரினா காமராஜர் சாலையில் அன்று காலையில் இருந்தே போக்குவரத்தை நிறுத்தி பொதுமக்களை மட்டும் அனுமதிப்பதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிக்பாக்கெட், செயின் பறிப்பு போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை பிடிக்கவும் போலீசார் ரகசியமாக கண்காணிக்க உள்ளனர்.

    புத்தாண்டு மற்றும் காணும் பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபடுவது போல அன்றைய தினம் மெரினாவில் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபடுவார்கள் என்பதால் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள உயர் போலீஸ் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    விமான சாகச நிகழ்ச்சியையொட்டி 3 நாட்கள் ஒத்திகை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்படி நேற்று முதல் நாள் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இன்று 2-வது நாளாகவும் ஒத்திகை நடத்தப்பட்டது. இதனை பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

    வருகிற 4-ந்தேதி கடைசி நாள் ஒத்திகை நடத்தப்படுகிறது. இதன் பின்னர் சாகச நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற உள்ளன.

    Next Story
    ×