என் மலர்
தமிழ்நாடு
ஒத்திவைக்கப்பட்ட தகுதித்தேர்வை உடனே நடத்த வேண்டும்- அன்புமணி ராமதாஸ்
- ஜூன் மாதம் நடத்தப்படுவதாக இருந்த மாநிலத் தகுதித் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டு 107 நாட்களாகி விட்டன.
- மாநிலத் தகுதித் தேர்வு நடத்தப்படாததால் சங்கிலித் தொடர் போன்று ஒன்றன்பின் ஒன்றாக பல பாதிப்புகள் ஏற்படும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தால் கடந்த ஜூன் 7, 8 ஆகிய தேதிகளில் நடத்தப்படுவதாக இருந்து, தொழில்நுட்பக் காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்ட மாநிலத் தகுதித் தேர்வுகளை மீண்டும் நடத்துவதற்கான எந்த அறிகுறிகளும் தென்படவில்லை. கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதி பெறுவதற்காக காத்திருப்போரின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வகையிலான இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.
கடந்த 6 ஆண்டுகளாக தகுதித் தேர்வுகள் நடத்தப்படாததாலும், ஜூன் மாதம் நடத்தப்படவிருந்த தகுதித் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதாலும், கடந்த 6 ஆண்டுகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கான கல்வித் தகுதி பெற்றவர்கள் இந்த தேர்வுகளில் பங்கேற்க முடியாது என்பதால் போட்டித் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டு விட்டன. தகுதித் தேர்வுகள் நடத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும் வரை இத்தேர்வுகளை நடத்த வாய்ப்பில்லை. இடைப்பட்ட காலத்தில், அரசு கல்லூரிகளில் மேலும் பல நூறு உதவிப்பேராசிரியர்கள் ஓய்வு பெறுவார்கள். அதனால், அரசு கல்லூரிகளில் கல்வித்தரம் மேலும், மேலும் சீரழியும். ஆனால், இதுகுறித்த எந்த அக்கறையும், கவலையும் தமிழக அரசுக்கு இல்லை.
ஜூன் மாதம் நடத்தப்படுவதாக இருந்த மாநிலத் தகுதித் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டு 107 நாட்களாகி விட்டன. இவ்வளவு நாட்களாகியும் தொழில்நுட்பக் குளறுபடிகளை ஒரு பல்கலைக்கழகத்தால் சரி செய்ய முடியவில்லை என்றால், அது பல்கலைக்கழகமாக இருக்கவே தகுதியில்லை. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு 4000 உதவிப் பேராசிரியர்களை நியமிப்பதை தாமதப்படுத்தவே மாநிலத் தகுதித் தேர்வை அரசும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையும் தாமதப்படுத்துவதாக தெரிகிறது. இது உதவிப் பேராசிரியர் பணிக்கு காத்திருப்போருக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய துரோகமாகும்.
மாநிலத் தகுதித் தேர்வு நடத்தப்படாததால் சங்கிலித் தொடர் போன்று ஒன்றன்பின் ஒன்றாக பல பாதிப்புகள் ஏற்படும். பின்னர் அரசே நினைத்தாலும் அந்த பாதிப்புகளை சரி செய்ய முடியாது. எனவே, மாநிலத் தகுதித் தேர்வுகளை செப்டம்பர் மாத இறுதிக்குள் வெளியிட்டு, அடுத்த மாதத் தொடக்கத்தில் முடிவுகளை அறிவிக்க மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதைத் தொடர்ந்து அக்டோபர் மாத இறுதிக்குள் உதவிப் பேராசிரியர் பணிக்கான போட்டித்தேர்வை நடத்தி, நவம்பர் மாதத்தில் முடிவுகளை அறிவிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.