search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வடசென்னை வளர்ச்சி நிதி ரூ.1000 கோடி என்ன ஆனது? கவுன்சிலர்கள் சரமாரி கேள்வி
    X

    வடசென்னை வளர்ச்சி நிதி ரூ.1000 கோடி என்ன ஆனது? கவுன்சிலர்கள் சரமாரி கேள்வி

    • எந்த பணியை செய்யக்கூறினாலும் வடசென்னை வளர்ச்சி நிதியில் செய்கிறோம் என அரசு அதிகாரிகள் கூறுகிறார்கள்.
    • எந்த திட்டங்களுக்கு எந்த பணம் ஒதுக்கப்படுகிறது என்ற விவரமும் தெரியவில்லை என்றார்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில் இன்று நடந்தது. துணை மேயர் மகேஷ்குமார் கமிஷனர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டம் தொடங்கியதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கவுன்சிலர் ஜெயராமன் பேசியதாவது:-

    எனது வார்டில் புயலால் 100-க்கும் மேலான மின் கம்பங்கள் சாய்ந்தன. முருகப்பா நகர் குளத்தில் மின் கம்பங்கள் அமைக்கும் பணி இதுவரை நடைபெறவில்லை. இதனால் இருள் சூழ்ந்துள்ளது. மேயருக்கு அதிகாரிகள் தவறான தகவல்களை கொடுக்கிறார்கள்.

    எந்த பணியை செய்யக்கூறினாலும் வடசென்னை வளர்ச்சி நிதியில் செய்கிறோம் என அரசு அதிகாரிகள் கூறுகிறார்கள்.

    எந்த திட்டங்களுக்கு எந்த பணம் ஒதுக்கப்படுகிறது என்ற விவரமும் தெரியவில்லை என்றார்.

    தனியரசு (மண்டல தலைவர்): வட சென்னை வளர்ச்சி நிதி ரூ.1000 கோடி சி.எம்.டி.ஏ. ஒதுக்கியது. அந்த நிதியில் என்ன பணிகள் செய்யப்படுகிறது. அது என்ன திட்டம், எந்தெந்த பணிகளுக்கு அதில் இருந்து நிதி ஒதுக்குகிறீர்கள்.

    மகேஷ்குமார் (துணை மேயர்): 30 தொகுதிகளுக்கு அந்த திட்டத்தில் வேலை செய்வதாக கூறுகிறார்கள். அது என்ன வேலை என்று தெரியவில்லை.

    ராதாகிருஷ்ணன்: மாநில அரசு சார்பில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. சி.எம்.டி.ஏ. மூலம் வளர்ச்சி நிதி தரப்படுகிறது. இது பல்வேறு துறைகளுக்கு செலவிடப்படும். எந்தெந்த பணிகளுக்கு இந்த பணம் ஒதுக்கப்படும் என்ற தகவலை இன்றைய கூட்டம் முடிந்த பின்னர் நான் உறுப்பினர்களுக்கு தருகிறேன்.

    டில்லிபாபு: (காங்கிரஸ்) கொடுங்கையூரில் குப்பை கிடங்கில் பயோமைனிங் திட்டப்படி குப்பைகள் மறு சுழற்சி செய்யப்பட்டு இடம் மீட்கப்படும் என மன்ற கூட்டத்தில் கடந்த ஆண்டு கூறினீர்கள். ஆனால் இதுரையில் எந்த பணியும் அங்கு நடைபெறவில்லை. அந்த திட்டம் என்ன ஆனது?

    மேலும் இந்து, கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களுக்கு சுடுகாடு அமைத்து தரப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் இந்து சுடுகாடு பணிகள் மட்டும் மெதுவாக நடைபெறுகிறது. மற்ற சுடுகாடு பணிகள் நடைபெறவில்லை.

    மேயர் பிரியா:- வெகு விரைவில் குப்பை கிடங்கு பயோமைனிங் திட்டம் தொடங்கப்படும். 2 வருடத்தில் முடிக்கப்படும்.

    பரிதி இளம் சுருதி: பேரிடர் காலத்தில் வார்டுகளில் பணிகள் செய்யும் போது ஒரு பகுதி பாதிக்கிறது. அதனால் ஒரு வார்டுக்கு 2 உதவி பொறியாளர்கள் நியமிக்க வேண்டும்.

    சுகன்யா செல்வம் (காங்கிரஸ்): சூளைமேடு பகுதியில் மழைக்கு பிறகு சாலைகள் புதிதாக போடப்பட்டது. அந்த சாலைகளை மின்வாரிய ஊழியர்கள் எந்த அனுமதியும் இல்லாமல் வெட்டி பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள்.

    கமிஷனர் ராதாகிருஷ்ணன்: இது தவறான செயல். அனுமதி இல்லாமல் சாலைகளில் கை வைக்கக்கூடாது. இது தொடர்பாக துறை செயலாளர்களிடம் பேசுகிறேன்.

    இவ்வாறு விவாதம் நடந்தது. கூட்டத்தில் 30 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    Next Story
    ×