search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சீன உளவு கப்பல் இலங்கை வருகை: தமிழக கடலோர பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு ஏற்பாடு
    X

    சீன உளவு கப்பல் இலங்கை வருகை: தமிழக கடலோர பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு ஏற்பாடு

    • இலங்கையில் இருந்து அகதிகளாக இந்தியாவுக்குள் ஊடுருவி வருகிறார்கள்.
    • இலங்கை வந்துள்ள சீன உளவு கப்பல் வருகிற 17-ந்தேதி வரை அங்கு நிறுத்தி வைக்கப்பட இருப்பதாக தகவல்கள்

    சென்னை:

    இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவும் நிலையில் அங்கு போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இதனால் இலங்கையில் இருந்து அகதிகளாக இந்தியாவுக்குள் ஊடுருவி வருகிறார்கள்.

    அகதிகள் போர்வையில் சட்ட விரோத செயல்கள் அரங்கேறி விடக்கூடாது என்பதில் தமிழக போலீசார் கடலோர பகுதிகளை தீவிர மாக கண்காணித்து வருகி றார்கள்.

    இந்த நிலையில் சீன உளவு கப்பல் அந்த நாட்டில் இருந்து புறப்பட்டு இலங்கைக்கு வந்திருப்பதும், அங்கு நிலை நிறுத்தப்பட்டிருப்பதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.

    சீனாவுக்கு சொந்தமான "யுவான் வாஸ்" என்ற பிரமாண்டமான உளவு கப்பல் அந்த நாட்டின் ஜியாங் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த கப்பல் கடந்த மாதம் 13-ந்தேதி அங்கிருந்து புறப்பட்டு நேற்று முன்தினம் இலங்கை கடற்பகுதியை வந்தடைந்துள்ளது. இலங்கையில் அம்மாந்தோட்டை துறைமுகத்தில் இந்த கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இந்த கப்பலில் இருந்தபடியே இந்திய கடல் பகுதியை (தமிழக எல்லைக் குட்பட்ட இடங்களை) எளிதாக உளவு பார்க்க முடியும். மிகவும் சக்தி வாய்ந்த இந்த சீன உளவு கப்பலில் இருந்து 750 கி.மீ. தூரத்துக்கும் அதிகமான கடல் பகுதிகளை துல்லியமாக உளவு பார்க்க முடியும் என்று கூறப்படுகிறது. கப்பலில் இருந்தபடியே செயற்கைகோள் உதவியுடன் தமிழக கடல் பகுதிகளை சீன உளவு பிரிவு அதிகாரிகளால் உளவு பார்த்து தகவல்களை தெரிந்து கொள்ள முடியும் என்பதால் இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் எழுந்தன.

    மத்திய வெளியுறவு அமைச்சகமும் இது தொடர்பாக கருத்துக்களை தெரிவித்திருந்தது. சீன கப்பல் வருகையால் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலனை பாதுகாக்கும் வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று வெளியுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.

    இலங்கை வந்துள்ள சீன உளவு கப்பல் வருகிற 17-ந்தேதி வரை அங்கு நிறுத்தி வைக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த கப்பலில் இருந்தபடியே அணு ஆராய்ச்சி மையங்களையும், சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட முக்கிய 6 துறை முகங்களையும் தீவிரமாக கண்காணித்து உளவு பார்க்க முடியும் என்பதால் உஷார் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. கூடுதல் கண்காணிப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    கூடங்குளம், கல்பாக்கம் போன்ற அணுமின் நிலையங்களையும் சீன உளவு கப்பலால் கண்காணிக்க முடியும் என்பதால் அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக தமிழக கடலோர பகுதிகள் அனைத்திலுமே பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    கடலோர பகுதிகளில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பாக டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆலோசனை நடத்தி உள்ளார். இதில் கடலோர பாதுகாப்பு குழும அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

    இந்த கூட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடலோரப் பகுதிகளில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மிகவும் உஷாராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இலங்கை கப்பல் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கையில் தமிழ் ஈழ ஆதரவாளர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்திலும் அது போன்ற போராட்டங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளதா? என்றும் உளவு பிரிவு போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த போலீஸ் சூப்பிரண்டுகள் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    Next Story
    ×