search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்படாமல் முடக்கம்
    X

    உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்படாமல் முடக்கம்

    • நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 34 பதவிகளுக்கு கட்சி அடிப்படையில் தேர்தல் நடைபெற உள்ளது.
    • இந்த 34 பதவி இடங்களும் மாவட்ட பஞ்சாயத்துகள், ஒன்றிய பஞ்சாயத்துகள், டவுன் பஞ்சாயத்துகள், மாநகராட்சி மற்றும் நகர சபைகளில் உள்ளன.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் 510 இடங்கள் காலியாக உள்ளன. இதில் 498 இடங்கள் ஊரக உள்ளாட்சி அமைப்புகளிலும், 12 இடங்கள் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் உள்ளன.

    இந்த காலி இடங்களை நிரப்புவதற்காக ஜூலை 9-ந்தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    இதையடுத்து 510 உள்ளாட்சி அமைப்புகளிலும் ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த 510 இடங்களிலும் கடந்த 20-ந்தேதி வேட்பு மனுதாக்கல் தொடங்கியது.

    நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்வது நிறைவடைந்தது. நேற்று மனுக்கள் மீதான பரிசீலனை நடந்தது. போட்டியில் இருந்து விலகுவதற்கு மனுக்களை வாபஸ் பெற நாளை கடைசி நாள் ஆகும்.

    மொத்தம் உள்ள 510 பதவிகளுக்கு 800 பேர் போட்டியிடுகிறார்கள். இதில் 436 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள், 40 பஞ்சாயத்து தலைவர்கள் பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இந்த 476 இடங்களுக்கும் கட்சி சார்பு இல்லாமல் தேர்தல் நடைபெறும்.

    ஆனால் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 34 பதவிகளுக்கு கட்சி அடிப்படையில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 34 பதவி இடங்களும் மாவட்ட பஞ்சாயத்துகள், ஒன்றிய பஞ்சாயத்துகள், டவுன் பஞ்சாயத்துகள், மாநகராட்சி மற்றும் நகர சபைகளில் உள்ளன.

    இந்த 34 பதவிகளுக்கு அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது கட்சி சின்னத்தை பெறுவதற்கு படிவம் 'ஏ' மற்றும் படிவம் 'பி' ஆகியவற்றை தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும். இந்த படிவங்களில் உள்ள கட்சி தலைவரின் ஒப்புதல் கையெழுத்தை அடிப்படையாக வைத்து தான் தேர்தல் அதிகாரி கட்சி சின்னங்களை ஒதுக்கீடு செய்வார்.

    வேட்பாளர் பட்டியலில் கட்சியின் சின்னம் இடம் பெற்றிருந்தால் தான் அந்த வேட்பாளர் பெயர் பட்டியலில் முதன்மை இடத்துக்கு வரமுடியும். ஆனால் தற்போது உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் அந்த நிலைக்கு வரமுடியாத துரதிருஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை பிரச்சினை எழுந்ததை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி அணியினரும், ஓ.பன்னீர் செல்வம் அணியினரும் தனித்தனியே செயல்பட தொடங்கி உள்ளனர். இதுவரை அவர்கள் சமீபத்திய தேர்தல்களில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் இருவரது கையெழுத்தை பெற்று இரட்டை இலை சின்னம் மூலம் போட்டியிட்டனர்.

    தற்போது இருவரும் பிரிந்துள்ளதால் கட்சி சார்பில் ஏ, பி படிவங்களை வழங்கவில்லை. இதனால் 34 உள்ளாட்சி பதவிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தை பெறமுடியவில்லை.

    படிவம் இல்லாத காரணத்தால் தேர்தல் ஆணையத்தால் இரட்டை இலை சின்னம் தற்காலிகமாக உள்ளாட்சி தேர்தலில் நிறுத்தி வைக்கப்படும் நிலைக்கு சென்றுள்ளது. தேர்தல் ஆணையம் இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காவிட்டாலும் கட்சி தலைவர்கள் இடையே ஏற்பட்ட பிளவு காரணமாக தானாகவே சின்னம் முடக்கப்படும் நிலைக்கு சென்று விட்டது.

    இது அ.தி.மு.க. வேட்பாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது.

    என்றாலும் உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிடுவதில் இருந்து பின் வாங்க போவதில்லை என்று அ.தி.மு.க.வினர் அறிவித்துள்ளனர். அந்தந்த மாவட்ட அ.தி.மு.க. செயலாளர்கள் தங்கள் பகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை சுயேட்சையாக போட்டியிடுமாறு அறிவுறுத்தி உள்ளனர்.

    இதுதொடர்பாக அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலர் கூறும்போது, 'எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கையெழுத்திட்ட படிவங்கள் எங்களிடம் உள்ளது. வேட்பு மனு தாக்கலின் போது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரங்களை படிவங்களில் எழுதிக் கொடுப்பது வழக்கம். இந்த முறை இரு அணிகளாக இருப்பதால் அ.தி.மு.க. வினர் வெற்றி பெறும் போது சிக்கலை ஏற்படுத்தும். அதனால் சுயேட்சையாகவே போட்டியிடுமாறு அறிவுறுத்தி இருக்கிறோம்' என்றனர்.

    மாநில தேர்தல் ஆணையத்திடம் சுயேட்சையாக போட்டியிடுபவர்களுக்காக ஒதுக்கீடு செய்ய 60 சின்னங்கள் தயாராக உள்ளன. இவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. சுயேட்சைகளின் விருப்பத்திற்கேற்ப சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.

    நாளை மாலை மனுக்கள் வாபஸ் பெறும் கால அவகாசம் முடிந்ததும் சுயேட்சைகளுக்கான சின்னங்கள் ஒதுக்கீடு நடைபெறும். அப்போது அ.தி.மு.க. வேட்பாளர்கள் என்ன சின்னத்தில் போட்டியிடுவார்கள் என்பது தெரிய வரும்.

    Next Story
    ×