search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தஞ்சை வேளாண் கல்லூரிக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பெயர்:  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
    X

    தஞ்சை வேளாண் கல்லூரிக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பெயர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

    • பசுமைப் புரட்சியின் தந்தை எனப் போற்றப்படும் எம்.எஸ். சுவாமிநாதன் 28-9-2023 அன்று மறைவெய்தியபோது அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினேன்.
    • உயரிய விருதுகளைப் பெற்றுள்ள எம்.எஸ்.சுவாமிநாதனின் நினைவைப் போற்றுகிற வண்ணம் தமிழ்நாடு அரசின் சார்பில் அறிவிப்பை வெளியிடுகிறேன்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் விதி எண்.110-ன்கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை வருமாறு:-

    வேளாண் அறிவியலை இருபதாம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு ஏற்றவாறு பயன்படுத்தும் பல்வேறு ஆராய்ச்சிகளை வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டி உலகளவில் புகழ் பெற்றவர் எம்.எஸ்.சுவாமிநாதன்.

    தமிழ்நாட்டில் கலைஞர் ஆட்சியில் வேளாண் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டு, வேளாண் ஆராய்ச்சி மையங்கள் அதிகளவில் உருவாக்கப்பட்டு, உணவு உற்பத்தியில் புரட்சியும், அதனை அனைவருக்கும் பகிர்ந்தளிப்பதற்கான செயல்முறைத் திட்டமும் மேற்கொள்ளப்பட்டது. இன்றளவிலும் இந்தியாவின் வெற்றிகரமான மாடலாக இருப்பது கலைஞர் ஆட்சிக் காலத்து மாடல்தான். இந்தப் பங்களிப்பில் அறிவியலாளர் எம்.எஸ்.சுவாமிநாதனின் ஆலோசனைகளும் இணைந்திருக்கின்றன.

    2021-ல் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் நடந்த பன்னாட்டுக் கருத்தரங்கைத் தொடங்கி வைக்கும் வாய்ப்பு எனக்கு அமைந்த போது, அவருடைய பணிகளைப் பாராட்டிப் பேசினேன். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு இன்றைய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளையும், இந்த அரசை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுள்ள முதலமைச்சராகிய என்னையும் அவர் பாராட்டி, வளர்ச்சிக்கான ஆலோசனைகளை வழங்கினார்.

    பசுமைப் புரட்சியின் தந்தை எனப் போற்றப்படும் எம்.எஸ். சுவாமிநாதன் 28-9-2023 அன்று மறைவெய்தியபோது அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினேன்.

    பத்மவிபூஷன், ரமோன் மகசசே உள்ளிட்ட உயரிய விருதுகளைப் பெற்றுள்ள அவரது நினைவைப் போற்றுகிற வண்ணம் தமிழ்நாடு அரசின் சார்பில் அறிவிப்பை வெளியிடுகிறேன்.

    தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சங்கோட்டையிலுள்ள வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இனி எம்.எஸ். சுவாமிநாதன் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் என்று அழைக்கப்படும். அதேபோல், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் இளம் வேளாண் அறிவியலில் பயிர்ப் பெருக்கம் மற்றும் மரபியல் பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்று முன்னிலை பெறும் மாணவருக்கு எம்.எஸ். சுவாமிநாதன் பெயரில் ஆண்டு தோறும் விருது வழங்கப்படும் என்பதை அறிவிப்பதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

    Next Story
    ×