search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சேலம் மாநாட்டில் நாம் எழுப்பும் மாநில உரிமை மீட்பு முழக்கம் டெல்லி வரை அதிரட்டும்...
    X

    சேலம் மாநாட்டில் நாம் எழுப்பும் மாநில உரிமை மீட்பு முழக்கம் டெல்லி வரை அதிரட்டும்...

    • நமது திராவிட மாடல் அரசின் திட்டங்கள் இன்று இந்தியாவுக்கான முன்னோடித் திட்டங்களாக வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகின்றன.
    • திசை திருப்பும் வதந்திகளில் கவனத்தை சிதறடிக்காமல், மாநாட்டின் மைய நோக்கமான, மாநில உரிமை மீட்பு முழக்கத்தை முன்னெடுங்கள்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதமே உள்ள நிலையில் தி.மு.க.வில் தேர்தலுக்கான ஆரம்ப கட்ட பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

    வாக்குச்சாவடி வாரியாக பணியாற்ற கட்சி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டு வந்தது.

    தமிழ்நாடு முழுவதும் பாக முகவர்கள் கூட்டத்தை மண்டல அளவில் கூட்டி அவர்கள் மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசி வந்தார்.

    இதைத் தொடர்ந்து தகவல் தொழில் நுட்ப அணியினர் மாவட்ட வாரியாக ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகின்றனர். இதில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் தி.மு.க. இளைஞரணி மாநாடு சேலத்தில் வருகிற 21-ந் தேதி மிகப்பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு நடைபெறும் முதல் மாநாடு என்பதால் இதை மிகப்பிரமாண்டமாக நடத்தி முடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த மாநாட்டில் சுமார் 5 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் அரசியல் அரங்கில் இளைஞரணி மாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரி சுமார் 50 லட்சம் கையெழுத்து பெறப்பட்டுள்ள நிலையில் இதை மாநாட்டில் பங்கேற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்க இருக்கிறார். இந்த கையெழுத்து பட்டியல் அதன் பிறகு மத்திய அரசுக்கு அனுப்பப்பட உள்ளது.

    இந்த நிலையில் மாநாட்டுக்கு வரும் தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள 'எக்ஸ்' வலை தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    தை பிறந்தாள் வழி பிறக்கும் என நம்பிக்கையளிக்கும் வகையில் மிச்சாங் புயல் பேரிடர் நிவாரணம், பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் வழங்கி உள்ளோம்.

    தமிழ்நாடெங்கும் சமத்துவ பொங்கல் மகிழ்ச்சியெனப் பொங்கட்டும். அது சமூக வலைத்தளங்களில் எதிரொலிக்கட்டும்.

    "நான்தான் எல்லாம்" என்ற சர்வாதிகாரப் போக்கு அகல, கூட்டாட்சித் தத்துவத்தை மதிக்கும் ஆட்சி ஒன்றிய அளவில் அமைய வேண்டும். அதற்கு தி.மு.க. இளைஞர் அணியின் சேலம் மாநாட்டில் நாம் எழுப்பும் மாநில உரிமை மீட்பு முழக்கம் டெல்லி வரை அதிரட்டும்.

    கவனச் சிதறல்களுக்கு இடம் கொடுக்காமல் மாநாட்டின் மைய நோக்கத்தை முன்னெடுப்போம்.

    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    தொண்டர்களுக்கு பொங்கல்-தமிழர் திருநாள் வாழ்த்து கடிதம் ஒன்றையும் எழுதி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு எதிர்கொண்ட மிச்சாங் மழை-வெள்ள இயற்கைப் பேரிடர் பாதிப்பிலிருந்து மக்களைக் காப்பதிலும் மீட்டெடுப்பதிலும் நமது திராவிட மாடல் அரசு அர்ப்பணிப்புடன் செயலாற்றியது. கடும் பேரிடர்களாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பிரதமரிடம் டெல்லியில், தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில் நானே நேரில் சென்று வலியுறுத்தியபோதும், அத்தகைய அறிவிப்போ, தமிழ்நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்கான நிதியோ வரவில்லையென்றாலும், நம் மக்களைக் காக்க வேண்டிய கடமையை உணர்ந்து, மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 6000 ரூபாய் நிதி வழங்கியதுடன், வீடுகளை இழந்த குடும்பத்தினர், படகுகள் சேதமான மீனவர்கள், உயிரிழப்புகளை எதிர்கொண்டவர்களின் குடும்பத்தினர், பயிர்கள் பாதிக்கப்பட்ட உழவர்கள், தொழில் முடங்கிய வணிகர்கள் என பல்வேறு தரப்பினருக்கான நிவாரணத் தொகையையும் உயர்த்தி அறிவித்து வழங்கி வருகிறது திராவிட மாடல் அரசு.

    முதலமைச்சர் என்கிற பொறுப்பில் உள்ள உங்களில் ஒருவனான நான் இந்தப் பணிகளை மேற்கொண்ட வேளையில், தி.மு.க.வின் நிர்வாகிகளும் தொண்டர்களும் அவரவர் பகுதிகளில் வாழும் மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி, அவர்களின் துயர் துடைக்கும் கைகளாகச் செயல்பட்டீர்கள்.

    பொருளாதாரப் பள்ளத்தாக்கில் விழுந்துகிடந்த தமிழ்நாட்டை இரண்டரை ஆண்டுகளில் மிகுந்த பாடு பட்டுச் சமதளத்திற்குக் கொண்டு வந்து, சிகரத்தை நோக்கிப் பயணிக்கச் செய்திருக்கிறது திராவிட மாடல் ஆட்சி.

    மதவெறிக்கு இடந்தராத, மொழி ஆதிக்க சிந்தனையில்லாத, மாநில உரிமைகளுக்கு மதிப்பளிக்கிற ஓர் அரசை அமைப்பதற்கான காலம் கனிந்து வந்துள்ளது. அதற்கான உற்சாகத்தைத் தரும் தொடக்க விழாவாக இந்தப் பொங்கல் திருநாள் அமைந்துள்ளது.

    தை பிறக்கிறது. இனி வரும் மாதங்களில் வழி பிறக்கட்டும். தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமாகச் சென்னை சங்கமம் நிகழ்வில் கேட்கின்ற பறை முழக்கம், தமிழ்நாட்டிற்கான வெற்றி முழக்கமாக அமையட்டும். ஜனவரி 21 அன்று சேலத்தில் நடைபெறுகிற இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு எழுப்புகின்ற 'மாநில உரிமை மீட்பு முழக்கம்' டெல்லி வரை அதிரட்டும். நாற்பதும் நமதே, நாடும் நமதே என்ற நம் இலக்கினை அடைவதற்கு உத்வேகமாகட்டும்.

    எழுச்சிமிகுந்த இளைஞரணி மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள் நிறைவடைந்து, தமிழ்நாடு முழுவதும் இளைஞர்கள் பெரும் ஆர்வத்துடன் திரண்டு வரத் தயாராகியுள்ள நிலையில், இளைஞரணி மாநாட்டின் மாநில உரிமை முழக்கம் எனும் நோக்கத்தைத் திசை திருப்ப நினைக்கும் எந்த முயற்சிகளுக்கும் கழகத்தினர் யாரும் இடம் கொடுத்திட வேண்டாம். மாநில உரிமைகளைக் காத்து கூட்டாட்சி இந்தியாவை உருவாக்கும் நோக்கத்தைச் செயல்படுத்துவதே சேலம் இளைஞர் அணி மாநாட்டின் நோக்கமாகும்.

    திசை திருப்பும் வதந்திகளில் கவனத்தை சிதறடிக்காமல், மாநாட்டின் மைய நோக்கமான, மாநில உரிமை மீட்பு முழக்கத்தை முன்னெடுங்கள். நாடு தழுவிய அளவில் அதுவே முதன்மைச் செய்தியாகட்டும்.

    எப்போதும் பொங்கல் அன்று கழகத் தோழர்கள் என்னைச் சென்னையில் வந்து சந்திப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளீர்கள். இம்முறை கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் அவரவர் பகுதிகளுக்குட்பட்ட இடங்களில் பொது மக்களின் பங்கேற்புடன் தமிழர் திருநாளைச் 'சமத்துவப் பொங்கல்' என்று பெயரிட்டு எழுச்சியுடன் கொண்டாட வேண் டும். கழக உடன்பிறப்புகளுக்கும் மக்களுக்கும் பொங்கல் பரிசுகளை வழங்கிடுங்கள். பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்க வேண்டும்.

    அனைவரது இல்லங்களிலும் 'சமத்துவப் பொங்கல்' எனக் கோலமிட்டு, அதனைச் சமூக வலைத்தளங்களில் பகிருங்கள்! அதுதான் தலைநகரில் பொங்கல் கொண்டாடும் எனக்கு நீங்கள் தரும் இனிப்பான பொங்கல் வாழ்த்தாகும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    Next Story
    ×