search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    4 மாவட்ட வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற கலெக்டர்களுக்கு உத்தரவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X

    4 மாவட்ட வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற கலெக்டர்களுக்கு உத்தரவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    • வடகிழக்கு பருவமழை காலம் தொடங்க உள்ள நிலையில் மழை நீர் வடிகால் பணிகள் எவ்வளவு முடிக்கப்பட்டுள்ளது என்ற விவரங்களையும் முதலமைச்சர் கேட்டறிந்தார்.
    • பொதுமக்கள் தரும் மனுக்கள் மீதும் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அரசு திட்டங்கள் மக்களை சென்றடைய பணிகள் வேகமாக நடைபெற வேண்டும்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'கள ஆய்வில் முதலமைச்சர்' என்ற திட்டத்தை கடந்த ஜனவரி மாதம் தொடங்கி ஒவ்வொரு மாவட்டத்துக்கும் நேரில் சென்று அந்தந்த மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள், சட்டம்-ஒழுங்கு தொடர்பான ஆய்வு கூட்டங்களை நடத்தி வருகிறார்.

    அந்த வகையில் நேற்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களின் ஒருங்கிணைந்த 2 நாள் கள ஆய்வுக்கூட்டம் நேற்று மறைமலைநகரில் நடந்தது.

    இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை பற்றி ஆய்வு மேற்கொண்டார். இதில் 3 மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    சட்டம்-ஒழுங்கை பேணி காத்து, குற்றச் சம்பவங்கள் நடைபெறாத வகையில் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

    இந்த கூட்டம் முடிந்ததும் மறைமலைநகரில் உள்ள வெல்கம் ஓட்டலில் இரவு தங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் மீண்டும் மறைமலைநகரில் கலெக்டர்கள், அதிகாரிகளுடன் கள ஆய்வு கூட்டம் நடத்தினார்.

    இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தா.மோ. அன்பரசன், மா.சுப்பிரமணியன், காந்தி ஆகியோரும் பங்கேற்றனர். இவர்களுடன் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, மாவட்ட கலெக்டர்கள் ராகுல்நாத் (செங்கல்பட்டு), கலைச் செல்வி மோகன் (காஞ்சிபுரம்), பிரபு சங்கர் (திருவள்ளூர்), ரஷ்மி சித்தார்த் ஜகடே (சென்னை), சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை செயலாளர் டாரேஸ் அகமது, வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர் மற்றும் மாவட்ட வருவாய் அதிகாரிகள், ஆர்.டி.ஓ.க்கள், பி.டி.ஓ.க்கள், நகராட்சி, மாநகராட்சி அதிகாரிகள் என 4 மாவட்டங்களின் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

    கூட்டம் தொடங்கியதும் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா வரவேற்று பேசினார். இதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்க உரை நிகழ்த்தினார். அதன் பிறகு ஒவ்வொரு மாவட்ட வாரியாக, பல்வேறு துறைகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார்.

    ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் எவ்வளவு செலவழிக்கப்பட்டுள்ளது. என்னென்ன பணிகள் நிலுவையில் உள்ளது. அந்த பணிகள் எப்போது முடிவடையும் என்பதை விரிவாக ஆய்வு செய்தார்.

    இது தொடர்பாக ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களும் தங்களது மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகளை எடுத்துரைத்தனர்.

    முடிவடையாத பணிகள் என்னென்ன காரணத்தால் நிலுவையில் உள்ளது என்ற காரணங்களையும் விளக்கினார்கள். மாதம் ரூ.1000 வழங்கப்படும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் எவ்வளவு பேர் பயன் அடைந்துள்ளனர்? இதில் நிராகரிக்கப்பட்டவர் எவ்வளவு பேர் மேல்முறையீடு செய்திருந்தனர்? அவர்களது மனு மீது கள ஆய்வு நடத்தப்பட்டு மீண்டும் எவ்வளவு பேருக்கு ரூ.1000 வழங்கப்பட உள்ளது ஆகிய விவரங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். அதற்கு ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களும் விளக்கம் அளித்தனர்.

    வடகிழக்கு பருவமழை காலம் தொடங்க உள்ள நிலையில் மழை நீர் வடிகால் பணிகள் எவ்வளவு முடிக்கப்பட்டுள்ளது என்ற விவரங்களையும் முதலமைச்சர் கேட்டறிந்தார்.

    அரசு அறிவிக்கும் திட்டங்கள், வளர்ச்சி பணிகள் மக்களை சென்றடையும் வகையில் விரைந்து முடிக்க வேண்டும் என்றும் காலதாமதமின்றி பணிகள் முடிக்கப்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.

    பொதுமக்கள் தரும் மனுக்கள் மீதும் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அரசு திட்டங்கள் மக்களை சென்றடைய பணிகள் வேகமாக நடைபெற வேண்டும். அதை ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களும் கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

    Next Story
    ×