search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குடிநீருடன் கழிவுநீர் கலப்பதால் நோய் பரவல் அதிகரிப்பு: தண்ணீரை காய்ச்சி குடிக்க டாக்டர்கள் வேண்டுகோள்
    X

    குடிநீருடன் கழிவுநீர் கலப்பதால் நோய் பரவல் அதிகரிப்பு: தண்ணீரை காய்ச்சி குடிக்க டாக்டர்கள் வேண்டுகோள்

    • குழாய் வழியாக வழங்கப்படும் குடிநீர் கடந்த சில நாட்களாக பயன்படுத்த முடியாத அளவுக்கு துர்நாற்றம் அடித்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
    • குடிநீரில் கழிவு நீர் கலப்பதை சரி செய்ய அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்த போதிலும் அதற்கு இன்னும் முழுமையான தீர்வு கிடைக்கவில்லை.

    சென்னை:

    வந்தாரை வாழவைக்கும் சென்னை மாநகரில் குடியேறுபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஒரு காலத்தில் தமிழகத்தில் உள்ள வெளிமாவட்டங்களில் இருந்து மட்டுமே அதிக அளவில் வேலைக்காகவும் தொழில் தொடங்கவும் சென்னை மாநகருக்கு மக்கள் படையெடுத்தனர்.

    ஆனால் கடந்த சில ஆண்டுகளாக வடமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளிகளும் சென்னை மாநகரில் கட்டுக்கடங்காத வகையில் குடியேறி இருக்கிறார்கள். இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் புதிது புதிதாக குடியேறுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அந்த வகையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் வசித்து வருவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

    இப்படி சென்னையில் குடியேறுபவர்களுக்காக சென்னை குடிநீர் வாரியம் மூலமாக தினமும் 100 கோடி லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த குடிநீரை சமையல் செய்வதற்கும் குளிப்பதற்கும் மக்கள் பயன்படுத்துகிறார்கள். அதே நேரத்தில் பெரும்பாலான பகுதிகளில் கேன் தண்ணீரும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    குழாய் வழியாக வழங்கப்படும் குடிநீர் கடந்த சில நாட்களாக பயன்படுத்த முடியாத அளவுக்கு துர்நாற்றம் அடித்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். அவற்றின் நிறம் மாறி மஞ்சள் கலராக குடிநீர் வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பெரும்பாலான பகுதிகளில் குடிநீர் குழாயுடன் கழிவு நீர் குழாயும் இணைந்துள்ளதாகவும் இதன் காரணமாகவே இதுபோன்று குடிநீர் மஞ்சள் கலரில் வருவதாகவும் பொது மக்கள் புகார் கூறியுள்ளனர்.

    சென்னையில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்கள் 40 முதல் நூறாண்டுகள் வரை பழமையானவை என்று அதிகாரிகள் கூறி உள்ளனர். இந்த குடிநீர் குழாய்களை மாற்றும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இருப்பினும் குழாய் பதிக்கப்பட்டுள்ள இடங்களில் மழை நீர் வடிகால், மின்சார வாரியம், பாதாள சாக்கடை உள்ளிட்ட பணிகளுக்காக பள்ளம் தோண்டப்படுகிறது. அப்போது கவனக்குறைவு காரணமாக குடிநீர் குழாய் சேதப்படுத்தப்பட்டு அதன் மூலமாக கழிவுநீர் கலப்பதும் தெரியவந்துள்ளது.

    இப்படி குடிநீரில் கழிவு நீர் கலப்பதை சரி செய்ய அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்த போதிலும் அதற்கு இன்னும் முழுமையான தீர்வு கிடைக்கவில்லை. இப்படி குடிநீருடன் கழிவுநீர் கலப்பதால் அதில் பல்வேறு வகையான வைரஸ்கள் பரவி நோய்களும் பரவி வருகின்றன. மஞ்சள் காமாலை டைபாய்டு, எலி காய்ச்சல், மூளைக்காய்ச்சல், வயிற்றுப் போக்கு உள்ளிட்டவையும் பொதுமக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. மலட்டுத்தன்மை ஏற்படும் ஆபத்து இருப்பதாகவும் டாக்டர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் குடிநீரை காய்ச்சி குடிப்பது மட்டுமே நல்லது என்றும் கூறி உள்ளனர். குடிநீரில் கலக்கப்படும் குளோரின் பாக்டீரியா தொற்றை மட்டுமே அளிக்கும் என்றும் தண்ணீரை காய்ச்சி குடித்தால் மட்டுமே அதில் உள்ள கிருமிகள் அழிந்து நல்ல தண்ணீர் நம் உடலுக்குள் செல்லும் என்றும் டாக்டர்கள் கூறுகிறார்கள்.

    சென்னை மாநகரை பொருத்தவரையில் ஆலந்தூர், பெருங்குடி, கோடம்பாக்கம், வளசரவாக்கம், அண்ணாநகர், திரு.வி.க.நகர் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீரில் கழிவு நீர் கலப்பது தெரியவந்துள்ளது. ஆலந்தூர் பகுதியில் நந்தம்பாக்கம், ஆதம்பாக்கம், நங்கநல்லூர் ஆகிய பகுதிகளிலும் குடிநீரில் கழிவுநீர் கலப்பதாக சென்னை மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    பெருங்குடி சுற்றுவட்டார பகுதியில் ராமலிங்கா நகர், ராம் நகர், அன்னை தெரசா நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் குடிநீரில் கழிவுநீர் கலப்பது தெரியவந்துள்ளது. கோடம்பாக்கம் பகுதியில் அண்ணாமலை நகர், ஜாபர்கான்பேட்டை, அசோக் நகர் உள்ளிட்ட இடங்களிலும் வளசரவாக்கம் பகுதியில் மதுரவாயல், அஷ்டலட்சுமி நகர், கிருஷ்ணமாச்சாரி நகர் ஆகிய இடங்களிலும் அண்ணாநகர் பகுதியில் வில்லிவாக்கம், பாபா நகர், டிபி சத்திரம், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் குடிநீரில் கழிவு நீர் கலப்பது அதிகரித்து உள்ளது.

    திரு.வி.க. நகர் பகுதியில் புளியந்தோப்பு, கொளத்தூர், ஓட்டேரி, ராஜமங்கலம் ஆகிய இடங்களிலும் குடிநீரில் கழிவுநீர் கலப்பது தெரியவந்துள்ளது. இதே போன்று தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட குரோம்பேட்டை, பீர்க்கங்கரணை ஆகிய இடங்களிலும் குடிநீருடன் கழிவு நீர் கலந்து பொதுமக்களை பல்வேறு நோய்களுக்கு ஆளாக்கி வருகிறது. இது தொடர்பாக டாக்டர்கள் கூறியதாவது:-

    குடிநீரில் கழிவு நீர் கலப்பதால் பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படும். குறிப்பாக விஷக்காய்ச்சல், மர்ம காய்ச்சல் போன்றவை வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. கடுமையான உடல் வலி, வரட்டு இருமல், நெஞ்சு, கண் வீக்கம், கண் வலி போன்ற பாதிப்புகளை இந்த காய்ச்சல்கள் ஏற்படுத்தி விடுகின்றன.

    எனவே தண்ணீரை நன்றாக காய்ச்சி குடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். குடிநீரை காய்ச்சி குடிப்பதன் மூலம் மட்டுமே அதன் மூலமாக பரவும் நோய்களை தடுக்க முடியும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×