search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சட்டசபை தேர்தலுக்கு இப்போதே தயாராகுங்கள்... அதிமுகவினருக்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு
    X

    சட்டசபை தேர்தலுக்கு இப்போதே தயாராகுங்கள்... அதிமுகவினருக்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு

    • பாராளுமன்ற தேர்தலில் சரியாக கூட்டணி அமைக்காததே நாம் தோல்வி அடைவதற்கு காரணமாக அமைந்து விட்டது என்று பெரும்பாலான நிர்வாகிகள் குற்றம் சாட்டினார்கள்.
    • கூட்டணி பற்றிய கவலையை விட்டு விட்டு ஒற்றுமையோடு பணியாற்றுங்கள்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியடைந்தது ஏன்? என்பது பற்றி அந்த கட்சியின் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி தொகுதி வாரியாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

    கடந்த 10-ந்தேதி அன்று தொடங்கிய இந்த ஆலோசனைக் கூட்டம் இன்று 3-வது நாளாக நடைபெற்றது. காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட சென்னை புறநகர் மாவட்ட நிர்வாகிகளுடன் முதல் நாள் அன்று ஆலோசனை நடத்தப்பட்டது.

    2-வது நாளான நேற்று சிவகங்கை, வேலூர், திருவண்ணாமலை நிர்வாகிகளிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது.

    3-வது நாளான இன்று காலையில் முதலில் அரக்கோணம் தொகுதியை சேர்ந்த நிர்வாகிகளுடனும், பின்னர் தஞ்சை தொகுதி நிர்வாகிகளுடனும் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

    அரக்கோணம் தொகுதி நிர்வாகிகளின் கூட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்கியது. 2 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற இந்த கூட்டம் 11.45 மணியளவில் முடிவடைந்தது. இந்த கூட்டத்தில் அரக்கோணம் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கட்சியின் வளர்ச்சி பணி பற்றியும் பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தது குறித்தும் எடப்பாடி பழனிசாமி முன்னணியில் காரசாரமான கருத்துக்களை தெரிவித்தார்கள்.

    பாராளுமன்ற தேர்தலில் சரியாக கூட்டணி அமைக்காததே நாம் தோல்வி அடைவதற்கு காரணமாக அமைந்து விட்டது என்று பெரும்பாலான நிர்வாகிகள் குற்றம் சாட்டினார்கள். பிரதமர் வேட்பாளர் யார் என்று அறிவிக்காமல் பிரசாரம் செய்ததும் கட்சியினர் ஒருங்கிணைப்பு இல்லாததும் தேர்தல் தோல்விக்கு முக்கிய காரணம் என்று நிர்வாகிகள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

    இதற்கு பதிலளித்து எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தற்கான காரணங்கள் என்ன என்பதை ஆராய்ந்து பார்த்து அதற்கேற்ற வகையில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பணியாற்ற வேண்டும். கீழ் மட்டத்தில் உள்ள நிர்வாகிகளை அரவணைத்து செல்ல வேண்டும். அப்போது தான் அவர்கள் சுறுசுறுப்பாக பணியாற்றுவார்கள். 2026 -ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கும் இப்போதே அனைவரும் பணியாற்ற தொடங்கி விடுங்கள்.

    அ.தி.மு.க.வின் வாக்கு வங்கி குறையாமல் அப்படியே தான் உள்ளது. எனவே தோல்வியை கண்டு துவண்டு விடாமல் வெற்றி பெற வேண்டும் என்று பணியாற்றுங்கள். தி.மு.க. அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். பெண் வாக்காளர்களும் தி.மு.க.வுக்கு எதிரான மனநிலையில் உள்ளனர். அதனை பயன்படுத்தி வருகிற சட்டசபை தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு வெற்றி பெற வேண்டும். கூட்டணி பற்றி இங்கு பலரும் குறிப்பிட்டு பேசினீர்கள். 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான வெற்றி வியூகத்தை நான் அமைத்து வைத்திருக்கிறேன்.

    எனவே நிச்சயம் அ.தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணி அமையும். அதனால் கூட்டணி பற்றிய கவலையை விட்டு விட்டு ஒற்றுமையோடு பணியாற்றுங்கள். மாவட்ட நிர்வாகிகள் சிலர் கீழ் மட்டத்தில் உள்ள கட்சியினரை மதிப்பது இல்லை என்கிற குற்றச்சாட்டுகள் சில இடங்களில் உள்ளன. அவற்றையெல்லாம் சரி செய்து மாவட்ட செயலாளர் கூறும் தொகுதியில் உள்ள முன்னணி நிர்வாகிகளும் கட்சியினரை அரவணைத்து செல்ல வேண்டும்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசியதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு அரக்கோணம் மாவட்ட செயலாளரான ரவி நிருபர்களிடம் கூறியதாவது:-

    23 ஆண்டுகளுக்கு பிறகு அ.தி.மு.க.வில் நடைபெறும் இந்த நேர்காணல் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஆட்சி கட்டிலில் அமர வைக்கும் நேர்காணலாக அமைந்துள்ளது.

    1999-ம் ஆண்டு அப்போது கட்சியை வழி நடத்திய ஜெயலலிதா இதைபோன்று நேர்காணல் நடத்தினார். அதன் பின்னர் 2001-ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சர் ஆனார்.

    அதேபோல வருகிற தேர்தலிலும் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆவது உறுதி. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 18 அமாவாசைகள் உள்ளன. இன்று நடந்த நேர்காணலின் போது எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற தேர்தலில் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம் எனக்கூறி எங்கள் அனைவருக்கும் பூஸ்ட் கொடுத்துள்ளார். எனவே அ.தி.மு.க. வினர் உற்சாகமாக பணியாற்றி எடப்பாடி பழனிசாமியை ஆட்சியில் அமர வைப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×