search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி குளறுபடி தமிழக போலீசாரின் தோல்வியை காட்டுகிறது: எடப்பாடி பழனிசாமி
    X

    ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி குளறுபடி தமிழக போலீசாரின் தோல்வியை காட்டுகிறது: எடப்பாடி பழனிசாமி

    • சரியாக முன் திட்டமிடாத காரணத்தினால், கிழக்கு கடற்கரை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
    • முதலமைச்சரின் வாகன அணிவகுப்பும், போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டது.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக உளவுத்துறை கடந்த 28 மாத தி.மு.க. ஆட்சியில், முற்றிலும் செயலிழந்துவிட்டதால், குற்றங்கள் பெருகி மக்களை குலைநடுங்க வைத்துள்ளது.

    அ.தி.மு.க. ஆட்சியில், அண்டை நாடான இலங்கையில் குண்டு வெடிப்பு நிகழ உள்ளதை முன்னதாகவே கண்டறிந்து, மத்திய அரசு மூலம் இலங்கைக்கு அறிவுரை வழங்கிய தமிழக நுண்ணறிவுப் பிரிவு, தி.மு.க. ஆட்சியில் கோவை கார் குண்டு வெடிப்பு, கள்ளக்குறிச்சி பள்ளி சம்பவம், இந்த ஆண்டு மதுரையில் நடைபெற்ற கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வில் உயிர்பலி, சுமார் 12 வருடங்களுக்குப் பிறகு தமிழகத்தில் கள்ளச்சாராய சாவு, துப்பாக்கி கலாசாரம், தினசரி கொலைகள் என்று, திமுக அரசின் காவல்துறை சறுக்கிய நிகழ்வுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

    தி.மு.க. ஆட்சியில், தமிழகத்தில் போதைப் பொருட்களின் பிடியில் இளைஞர்களும், கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை என, பல்வேறு குற்றங்கள் தமிழகத்தில் தொடர்ந்து அரங்கேற்றப்பட்டு வருகின்றன. 1.9.2023 முதல் 12.9.2023 வரை மட்டும் தமிழகத்தில் சுமார் 40-க்கும் மேற்பட்ட கொலைச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.

    நேற்று (12-ந்தேதி) கோவை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பாக ரஞ்சித் என்பவர் ஆஜராகிவிட்டு, தனது நண்பர்கள் நித்திஷ், கார்த்திக் ஆகியோருடன் வீடு திரும்பிச் செல்லும் போது, எட்டு பேர் கொண்ட மர்ம கும்பல் பட்டப்பகலில் பயங்கர ஆயுதங்களுடன் கொலை வெறித் தாக்குதல் நடத்தியதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

    உயிருக்குப் போராடிய மூவரும் தற்போது கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இச்சம்பவம் கோவை மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    20.8.2023 அன்று, கழக வீரவரலாற்றின் பொன் விழா எழுச்சி மாநாடு மதுரையில் நடைபெற்றதையொட்டி, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம், இம்மாநாட்டிற்கு வரும் பல லட்சக்கணக்கான தொண்டர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிடவும், பல்லாயிரக்கணக்கில் வரும் வாகனங்களை ஒழுங்குபடுத்தவும், சாலைகளில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம், தேவைப்படும் காவலர்களை பணியமர்த்திட வேண்டும் என்று மனு அளிக்கப்பட்டது.

    ஆனால், தி.மு.க. அரசின் ஏவல்துறை, 20.8.2023 அன்று மதுரையில் சுமார் 15 லட்சத்திற்கும் அதிகமான கழகத் தொண்டர்கள் கலந்து கொண்ட வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டிற்கு உரிய பாதுகாப்பு வழங்காமலும், போக்குவரத்து நெரிசலை சீர்செய்யாமலும் வேடிக்கை பார்த்தது.

    அதே போன்ற நிலைமை தான் இரு நாட்களுக்கு முன்பு, சென்னை பனையூர் பகுதியில் நடைபெற்ற ஆஸ்கார் பரிசு பெற்ற ஏ.ஆர். ரஹ்மானுடைய இசை நிகழ்ச்சியிலும் நடைபெற்றது. நிகழ்ச்சி நடத்த அனுமதி அளித்த காவல்துறை, போக்குவரத்து நெரிசலை சீர்செய்தல் குறித்தும், வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் குறித்தும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடன் பேசி, சரியாக முன் திட்டமிடாத காரணத்தினால், கிழக்கு கடற்கரை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    முதலமைச்சரின் வாகன அணிவகுப்பும், போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டது. இது, தி.மு.க. அரசின் காவல்துறையினுடைய தோல்வியைக் காட்டுகிறது.

    அ.தி.மு.க. ஆட்சிக் காலங்களில் காவல்துறைக்கு சுதந்திரம் வழங்கி, சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தியது போல், இனியாவது தமிழகக் காவல்துறை சுதந்திரமாக செயல்பட அனுமதித்து, சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதை உறுதி செய்திட வேண்டும் என்றும், தமிழக மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும் என்றும், காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×