search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    காட்டு பன்றிகளுக்கு வைத்த மின்கம்பியை மிதித்த 3 யானைகள் மின்சாரம் தாக்கி பலி- ஐகோர்ட்டு அவசரமாக விசாரணை
    X

    மின்சாரம் தாக்கி இறந்த 3 காட்டு யானைகளை படத்தில் காணலாம்.

    காட்டு பன்றிகளுக்கு வைத்த மின்கம்பியை மிதித்த 3 யானைகள் மின்சாரம் தாக்கி பலி- ஐகோர்ட்டு அவசரமாக விசாரணை

    • பாலக்கோடு வனத்துறையினர் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்த விவசாயி முருகேசன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    • மின்சாரம் தாக்கி இறந்து கிடந்த யானைகளை பார்வையிட்டு பாலக்கோடு போலீசார் மற்றும் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாரண்டஅள்ளி:

    தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி, பாலக்கோடு பகுதியில் கடந்த மாதம் மக்னா யானை ஒன்று சுற்றித்திரிந்தது. இந்த யானை அப்பகுதியில் உள்ள விளைநிலங்களை நாசம் செய்து வந்தது. இதனால் அப்பகுதி மக்கள் இந்த யானை விரட்டி பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டி விட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனால் வனத்துறையினர் அந்த மக்னா யானையை பிடித்து முதுமலை காட்டிற்கு கொண்டு சென்றனர்.

    பாலக்கோடு, மாரண்டஅள்ளி, பாப்பாரப்பட்டி பகுதிகளில் குட்டிகளுடன் 5 யானைகள் சுற்றித்திரிந்தது. இந்த யானைகள் அப்பகுதியில் இரவில் அருகில் உள்ள விளைநிலங்களில் புகுந்து நாசம் செய்து வந்தது.

    இந்த நிலையில் மாரண்டஅள்ளி அருகே உள்ள காளிகவுண்டன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது50). இவர் 2 ஏக்கர் விவசாய நிலத்தில் சோளம், ராகி, தென்னை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்துள்ளார்.

    இரவு நேரத்தில் யானை மற்றும் காட்டுப்பன்றி தொல்லை காரணமாக தனது விவசாய நிலத்தில் சட்ட விரோதமாக மின்சார வயர்கள் அமைத்து உள்ளார்.

    இந்த மின் வயர்கள் நேரடியாக மின்சார கம்பத்தில் இருந்து திருட்டு தனமாக மின்சாரம் எடுத்து விவசாய நிலத்தில் விட்டுள்ளார்.

    நேற்றிரவு அப்பகுதியில் சுற்றித்திரிந்த 5 காட்டு யானைகள் தண்ணீர், உணவு தேடி முருகேசன் தோட்டத்திற்குள் புகுந்தது. அப்போது விளைநிலத்தில் இருந்த மின்சார கம்பியில் சிக்கிய 40 வயது மதிக்கத்தக்க 2 பெண் யானை, ஒரு ஆண் யானை என 3 காட்டு யானைகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. அதிர்ஷ்டவசமாக இரண்டு குட்டி யானைகள் உயிர் தப்பியது.

    இதனை இன்று காலை அந்த வழியாக விவசாய விளைநிலத்திற்கு வந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து பாலக்கோடு போலீசார் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் அவர்கள் விரைந்து வந்தனர். மின்சாரம் தாக்கி இறந்து கிடந்த யானைகளை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது தொடர்பாக பாலக்கோடு வனத்துறையினர் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்த விவசாயி முருகேசன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதையடுத்து அந்த 3 யானைகளை உடற்கூராய்வு செய்ய மருத்துவக்குழுவினர் வந்தனர். அப்போது அந்த 3 யானைகளுடன் வந்த 2 குட்டி யானைகள் தாயை விட்டு பிரிய முடியாமல் அங்கேயே சோர்ந்து போய் திகைத்து நின்றது. இதனால் வனத்துறையினர் அந்த குட்டி யானைகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் 3 காட்டு யானைகள் மின்சாரம் தாக்கி இறந்த நிலையில் உயிர்தப்பிய 2 குட்டி யானைகளை பாதுகாக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை அவசர வழக்காக இன்று பிற்பகல் பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு விசாரிக்கிறது.

    Next Story
    ×