search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பொதுமக்களை மிரட்டி பணம் பறிக்கும் குற்றச்செயல் அதிகரிப்பு- சைபர்கிரைம் போலீசார் எச்சரிக்கை
    X

    பொதுமக்களை மிரட்டி பணம் பறிக்கும் குற்றச்செயல் அதிகரிப்பு- சைபர்கிரைம் போலீசார் எச்சரிக்கை

    • மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் உணர்ச்சிகளைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்களை இணங்கும்படி கையாளுகிறார்கள்.
    • ஏதேனும் நடவடிக்கை எடுப்பதற்கு முன் அல்லது தகவலை வழங்குவதற்கு முன், நம்பகத்திற்குரியதா என்பதை உறுதிப்படுத்தவும்.

    சென்னை:

    மோசடி நபர்கள் சமீப காலமாக பாதிக்கப்பட்டவரிடம் அவரது மகன், மகள் பண மோசடி அல்லது சைபர் கிரைம் குற்றச்செயல்களில் ஈடுபட்டு இருப்பதாக போலீசார் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் போல் செல்போனில் பேசி மிரட்டி பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இது தற்போது அதிகரித்து உள்ளது. இது போன்ற சம்பவம் கடந்த வாரம் சென்னையில் நடந்து உள்ளது. இதில் பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று இணையதள குற்றப்பிரிவு போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதுதொடர்பாக சைபர் கிரைம் கூடுதல் காவல்துறை இயக்குனர் சஞ்சய்குமார் கூறியதாவது:-

    அமலாக்கதுறையினர் அல்லது அதிகாரிகள் எனக்கூறி அழைப்பவர்களின் அடையாளத்தை எப்போதும் சரிபார்க்கவும். அவர்களின் பெயர் மற்றும் அவர்கள் சார்ந்த துறையைக் கோரவும். பின்னர் அதிகாரப்பூர்வ தொடர்புகள் மூலம் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு அவர்களின் அடையாளத்தை சுயமாக சரிபார்க்கவும்.

    குடும்ப உறுப்பினர் குற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி உங்களுக்கு அழைப்பு வந்தால், பீதி அல்லது பயத்திற்கு ஆளாகாமல் அமைதியாக இருக்கவும்.

    மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் உணர்ச்சிகளைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்களை இணங்கும்படி கையாளுகிறார்கள். ஏதேனும் நடவடிக்கை எடுப்பதற்கு முன் அல்லது தகவலை வழங்குவதற்கு முன், நம்பகத்திற்குரியதா என்பதை உறுதிப்படுத்தவும்.

    சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் குடும்ப உறுப்பினரைத் தொடர்பு கொண்டு அவர்களின் பாதுகாப்பு மற்றும் இருப்பிடத்தைச் சரிபார்க்கவும். தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகள் அல்லது செய்திகளுக்கு பதிலளிக்கவோ அல்லது பணம் அனுப்பவோ வேண்டாம்.

    இது போன்ற மோசடிக்கு ஆளாகியிருந்தால், உடனடியாக சைபர்கிரைம் கட்டணமில்லா உதவி எண் 1930-ல் புகார் செய்யலாம். அல்லது www.cybercrime.gov.in என்ற இணைய தளத்தில் உங்களது புகாரைப்பதிவு செய்யலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×