search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தனித்து போட்டி- பாரதிய ஜனதா கருத்துக்கு ஜெயக்குமார் பதிலடி
    X

    தனித்து போட்டி- பாரதிய ஜனதா கருத்துக்கு ஜெயக்குமார் பதிலடி

    • 2024 பாராளுமன்ற தேர்தல் கூட்டணி பற்றி அந்த நேரத்தில்தான் முடிவாகும்.
    • தனித்து போட்டியா? கூட்டணியா? என்பதெல்லாம் அவர்கள் விருப்பம்.

    சென்னை:

    தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா இடம் பெற்றுள்ளது. 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு பா.ஜனதா தயாராகி வருகிறது.

    இது தொடர்பாக மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பா.ஜனதா தலைவர் அண்ணாமலை பேசும்போது, "அ.தி.மு.க. பிளவுபட்டு இருக்கிறது. அக்கட்சி பிரச்சினை தேர்தல் ஆணையத்திலும், நீதிமன்றத்திலும் இருக்கிறது. எனவே எடப்பாடி பழனிசாமி வாழ்க..., ஓ.பன்னீர்செல்வம் வாழ்க..." என்று நாம் அவர்கள் பின்னால் செல்ல தேவையில்லை. அவசியமும் இல்லை. அவர்களுடன் (அ.தி.மு.க.) கூட்டணி வைப்பதை பொதுமக்கள் விரும்ப மாட்டார்கள்.

    தமிழ்நாட்டில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜனதா தனித்து களம் கண்டு கணிசமான வாக்குகளை பெற்றது. அதே போன்று தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலிலும் போட்டியிடுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

    ஏற்கனவே அ.தி.மு.க.வை இணைக்க பா.ஜனதா தலைவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலிக்காத நிலையில் பா.ஜனதா யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தனித்து போட்டி என்ற அண்ணாமலையின் கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    இது தொடர்பாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் அ.தி.மு.க.வும், பா.ஜனதாவும் இடம் பெற்றுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை கூட்டணிக்கு நாங்கள் தலைமை வகிக்கிறோம்.

    2024 பாராளுமன்ற தேர்தல் கூட்டணி பற்றி அந்த நேரத்தில்தான் முடிவாகும். தனித்து போட்டியா? கூட்டணியா? என்பதெல்லாம் அவர்கள் விருப்பம்.

    அவர்கள் கட்சி நிலைப்பாட்டை பேச அவர்களுக்கு முழு உரிமை உண்டு. நிர்வாகிகள் கூட்டத்தில் கட்சிக்காரர்களை குஷிப்படுத்தவும் பேசி இருக்கலாம்.

    எந்த கட்சி எங்களோடு இணைந்தாலும் சரி. எங்கள் தலைமையில்தான் கூட்டணி என்பதை ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி தெளிவுபடுத்தி விட்டார்.

    எத்தனை கட்சிகளாக இருந்தாலும் சரி. எந்த கட்சியாக இருந்தாலும் சரி. எங்களோடு கூட்டணிக்கு வரும் போதுதான் அவர்களுக்கு அங்கீகாரங்கள் கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×