search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பொதுக்கூட்டம் நடத்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
    X

    பொதுக்கூட்டம் நடத்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

    • முதலமைச்சர் குறித்தும் தான் முன்பு தெரிவித்த கருத்துக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.
    • மனுவை அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவு.

    சென்னை:

    கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் கள்ளக்குறிச்சி தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் வெங்கடாசலம் கடந்த செப்டம்பர் 19-ந் தேதி புகார் ஒன்றை அளித்தார். அதில் கள்ளக்குறிச்சி மந்தவெளியில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செப்டம்பர் 19-ந்தேதி நடந்தது.

    அப்போது அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. குமரகுரு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மிகவும் தரக் குறைவாக அவதூறாக பேசினார். இதுகுறித்து அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இதையடுத்து போலீசார் குமரகுரு மீது இரு பிரிவினருக்கிடையே மோதலை ஏற்படுத்துதல், அவதூறாக, கீழ்த்தரமாக பேசுதல் உள்ளிட்ட சட்டப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் குமரகுரு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், "மனுதாரர் எம்.எல்.ஏ.வாக 3முறை பதவி வகித்துள்ளார். திராவிடர் தலைவர் அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு கள்ளக்குறிச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.

    அப்போது சனாதனம் குறித்தும் நீட் தேர்வு விதி விலக்கு குறித்தும் தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்து வரும் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தும் பேசினார். முதலமைச்சர் குறித்தும் விமர்சனம் செய்தார். இதற்காக அவர் நிபந்தனையற்ற மன்னிப்பும் பின்னர் கேட்டுக்கொண்டார்.

    ஆனால் இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் போலீசார் அவசரகதியில் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். எனவே அவருக்கு முன் ஜாமின் வழங்க வேண்டும் என்று வாதிட்டார்.

    இதையடுத்து நீதிபதி, முதலமைச்சர் குறித்து மனுதாரர் பேசியுள்ள கருத்து கண்டிக்கத்தக்கது. அது மிகவும் அவதூறாக, மோசமாக உள்ளது.

    எனவே, முதலமைச்சர் குறித்து தெரிவித்த அவதூறு கருத்துகளுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்டு மீண்டும் ஒரு பொதுக்கூட்டத்தை மனுதாரர் நடத்த வேண்டும். அப்போது முதலமைச்சர் குறித்தும் தான் முன்பு தெரிவித்த கருத்துக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த மனுவை அடுத்த வாரத்துக்கு தள்ளி வைக்கிறேன் என்று உத்தரவிட்டு உள்ளார்.

    Next Story
    ×