search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழக அரசின் சாதனைகளை வாசிக்க மனமின்றி கவர்னர் வெளியேறினார்- அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு
    X

    தமிழக அரசின் சாதனைகளை வாசிக்க மனமின்றி கவர்னர் வெளியேறினார்- அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

    • உரை எனது மனசாட்சிக்கு விரோதமாக இருக்கிறது என்று சொல்லி கவர்னர் வராமல் இருந்திருக்கலாம்.
    • தமிழகம் முதன்மையான இடத்தில் உள்ளது என்பதை புள்ளி விவரத்தோடு நாங்கள் சொல்வதற்கு தயாராக இருக்கின்றோம்.

    சென்னை:

    சட்டமன்ற பேரவையில் இன்று கவர்னர் உரை தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நிருபர்களிடம் கூறியதாவது:-

    கவர்னர் உரையோடு சட்டமன்ற பேரவை தொடங்கப்படும் என்ற அறிவிப்பு தரப்பட்டு, ஜனநாயகத்தை மதிக்கின்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னரை முறைப்படி அழைத்து இன்று சட்டமன்றத்தில் முதல் கூட்டத்தைக் கூட்டினார்.

    கேரள கவர்னர் இரண்டு வார்த்தைகள் மட்டும் பேசி விட்டுச் சென்றுவிட்டார். நம்முடைய தமிழ்நாட்டின் கவர்னர், கவர்னர் உரையிலிருந்து பேசாமல் தனது சொந்த சில கருத்துகளை பேசிவிட்டு அமர்ந்து விட்டார்.

    தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்றார். ஆனால், மரபுப்படி முதலில் தமிழ்த் தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதமும் இசைக்கப்படும். இதனை கடந்த ஆண்டிலேயே நம்முடைய சட்டப்பேரவைத் தலைவர் எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

    ஆனால், தென் மாநிலங்களில் இருக்கக்கூடிய கவர்னர்களின் திருவிளையாடல்கள் எல்லாம் அங்கிருக்கக் கூடிய அரசாங்கங்களுக்கு எதிராக அமைந்திருக்கின்றன. இவற்றையெல்லாம் இந்திய மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

    நிச்சயமாக கவர்னரின் நடவடிக்கைகள், வட மாநிலங்களிலும் இந்தியா கூட்டணிக்கு வலிமையை உருவாக்கும் வண்ணம் இன்று அவர் பதிலளித்திருக்கிறார். ஜனநாயகத்தை கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

    அவருக்கு கொடுத்த உரையில் சந்தேகம் ஏதேனும் இருந்தால் கேட்கலாம். உரையில், உண்மைக்கு மாறாக இருக்கிறது, சரியாக இல்லை என்று அவர் கூறினால் அதற்கு விளக்கம் கொடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். தமிழ்நாடு அனைத்து விதத்திலும் முதலிடத்தில் இருந்து கொண்டிருக்கிறது என்பதை புள்ளி விவரங்களோடு நாங்கள் சொல்லுகின்றபோது, அதை ஏற்றுக்கொள்கிற மனப்பக்குவமும், அதனைத் தாங்கிக் கொள்கிற சக்தியும் கவர்னருக்கு இல்லை என்பதைத் தான் இது காட்டுகிறது.

    தான் ஒரு மாநிலத்தின் தலைவராக, தலைமைப் பொறுப்பில் இருக்கக்கூடிய ஒரு மாநிலம், இந்திய ஒன்றியத்தில் பல்வேறு துறைகளில் முன்னேறி இருக்கிறது, தேசிய அளவில், தமிழ்நாட்டின் ஜி.டி.பி. உயர்ந்திருக்கிறது.

    விளையாட்டுப் போட்டிகளில் ஐந்தாவது இடத்தில் இருந்து 2-வது இடத்திற்கு வந்திருக்கிறோம், பல துறைகளில் முதலிடத்திற்கு வந்துள்ளோம், இவற்றையெல்லாம் கவர்னர் உரையில் சுட்டிக்காட்டியிருக்கிறோம். அதை ஏற்றுக்கொள்ளவோ, படிக்கவோ மனமில்லாமல், இந்த அரசின் சாதனைகளை தான் வாசிக்க விருப்பமில்லாமல், பொய்யான கருத்துகளை தெரிவித்து, தனக்கு ஏற்றாற்போல அவர் படித்திருக்கின்றார்.

    தமிழகம் முதன்மையான இடத்தில் உள்ளது என்பதை புள்ளி விவரத்தோடு நாங்கள் சொல்வதற்கு தயாராக இருக்கின்றோம். கவர்னர் விளக்கம் கேட்டிருந்தால் நிச்சயமாகக் கொடுத்திருப்போம்.



    ஆனால், அவர் ஏதும் விளக்கங்கள் கேட்கவில்லை. அதனால்தான் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு உள்ளன. இந்த உரை எனது மனசாட்சிக்கு விரோதமாக இருக்கிறது என்று சொல்லி கவர்னர் வராமல் இருந்திருக்கலாம். ஆனால், ஜனநாயகத்தை மதிக்கக்கூடிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், கவர்னர் என்ற அந்தப் பதவிக்கு ஜனநாயகத்தில் நாம் உரிய மரியாதை தர வேண்டும் என்று மதிப்புக் கொடுக்கின்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் இருக்கின்ற காரணத்தினால்தான், இன்று நடைபெற்ற இத்தனை நிகழ்வுகளையும் நாங்கள் தாங்கிக் கொண்டிருக்கிறோம்.

    தேசிய கீதத்தை வாசிக்க வேண்டுமென்று சொல்கின்ற கவர்னர் நம்முடைய சட்டப்பேரவைத் தலைவர் உரையை படிக்கின்றவரை அங்கேயே பொறுமையோடு இருந்தவர் இன்னும் இரண்டு நிமிடங்கள் இருந்திருக்கலாம், சபாநாயகர் தமிழில் பேசுவது என்னவென்று அவருக்குத் தெரியாது. ஆனால், சபாநாயகர் பேசும்போது, திடீரென்று கவர்னர் எழுந்து சென்று விட்டார். இரண்டு நிமிடம் பொறுத்திருந்து, இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட பின்பு உரிய மரியாதையோடு அவர் சென்றிருக்க வேண்டும். ஆனால், அவர் மரியாதையை அவரே தவற விடுகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×