என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிட முடிவு
- தமிழக தேர்தல் களத்தில் காங்கிரஸ், பா.ஜனதா ஆகிய தேசிய கட்சிகளுக்கு எதிராகவும், மாநில கட்சிகளான தி.மு.க., அ.தி.முக.வுக்கு எதிராகவும் நாம் தமிழர் கட்சி களமாடி வருகிறது.
- மாநில, தேசிய கட்சிகளுக்கு எதிராக எப்போதுமே செயல்படுவோம் என்றும், தனித்து போட்டியிடும் முடிவில் எப்போதும் மாற்றம் இருக்காது என்றும் அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை:
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனித்து போட்டியிடுவது என்கிற முடிவில் மாறாமலேயே இருந்து வருகிறார்.
2010-ம் ஆண்டு தொடங்கப்பட்ட அந்த கட்சி இதுவரை நடந்துள்ள சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களில் தனித்தே களம் கண்டுள்ளது. தேர்தல் களத்தில் வெற்றி, தோல்வியை பற்றி கவலைப்படாமல் தனித்து போட்டியிடுவதையே நாம் தமிழர் கட்சி பலமாக கருதுகிறது.
அந்த வகையில் வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடுகிறது. இதற்கான பணிகளை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான ஏற்கனவே தொடங்கி விட்டார்.
தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியிலும் நாம் தமிழர் கட்சி தனித்தே களம் காண்கிறது.
இது தொடர்பாக கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் சீமான் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த வகையில், அடுத்த மாதம் நாம் தமிழர் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொங்கலுக்கு பிறகு இந்த கூட்டம் நடைபெற உள்ளது. தமிழக தேர்தல் களத்தில் காங்கிரஸ், பா.ஜனதா ஆகிய தேசிய கட்சிகளுக்கு எதிராகவும், மாநில கட்சிகளான தி.மு.க., அ.தி.முக.வுக்கு எதிராகவும் நாம் தமிழர் கட்சி களமாடி வருகிறது. இப்படி மாநில, தேசிய கட்சிகளுக்கு எதிராக எப்போதுமே செயல்படுவோம் என்றும், தனித்து போட்டியிடும் முடிவில் எப்போதும் மாற்றம் இருக்காது என்றும் அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.






