search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ரூ.1000 கோடிக்கு மது விற்பனை
    X

    தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ரூ.1000 கோடிக்கு மது விற்பனை

    • தமிழகம் முழுதும் உள்ள 5,300 டாஸ்மாக் கடைகளிலும் புத்தாண்டிற்காக கூடுதலாக சரக்குகள் இருப்பு வைக்கப்பட்டன.
    • சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் 3 மடங்கு சரக்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

    சென்னை:

    தமிழகத்தில் பண்டிகை காலங்களில் மது விற்பனை பல மடங்கு விற்பது வழக்கம். தீபாவளி, பொங்கல் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டம் ஆகியவற்றின் போது எதிர்பார்ப்பதை விட மது விற்பனை அதிகரிக்கிறது.

    கடந்த ஆண்டு மார்ச் மாதம் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டதையடுத்து விற்பனை சற்று சரிந்தது. உயர், நடுத்தரம், குறைந்த ரகம் மதுபானங்கள் விலை கணிசமாக உயர்த்தப்பட்டதால் குறைந்த ரக மது பிரியர்கள் பாதிக்கப்பட்டனர்.

    தற்போது நடுத்தர ரக மது பிரியர்களும் குறைந்த ரக மதுபானங்களுக்கு மாறியதால் கடைகளில் எப்போதும் தட்டுப்பாடாக உள்ளது.

    இந்த நிலையில் புத்தாண்டு கொண்டாட்டம் வார இறுதி நாளில் வந்ததால் இந்த வருடம் வழக்கத்தை விட விற்பனை அதிகரித்துள்ளது. 31-ந் தேதி (சனிக்கிழமை) மாலையில் இருந்தே டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது.

    தமிழகம் முழுதும் உள்ள 5,300 டாஸ்மாக் கடைகளிலும் புத்தாண்டிற்காக கூடுதலாக சரக்குகள் இருப்பு வைக்கப்பட்டன.

    சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் 3 மடங்கு சரக்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டன. பீர், விஸ்கி, பிராந்தி, ரம், ஜின், ஒயின் உள்ளிட்ட அனைத்து மது வகைகளும் குவிக்கப்பட்டன.

    தற்போது ஒரு சில இடங்களில் பார்கள் இல்லாததால் சரக்கு பாட்டில்களை வாங்கி வெளியில் வந்து குடித்தனர். ஒருசிலர் டாஸ்மாக் கடை முன்பே குடித்தனர். பார்கள் உள்ள கடைகளில் இரவு 11 மணி வரை கூட்டம் நிரம்பி வழிந்தது.

    இரவு 10 மணிக்கு கடை மூடப்பட்டதால் மது பிரியர்கள் திண்டாடினார்கள். ஆனாலும் ஒரு சில இடங்களில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் கிடைத்தன.

    புத்தாண்டு உற்சாகத்தில் பலர் கூடுதல் விலையை பெரிதாக எண்ணாமல் மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். நள்ளிரவு 12 மணிக்கு பிறகு மது அருந்துவதற்காக மொத்தமாகவும் கடைகளில் வாங்கி சென்றனர்.

    சென்னையில் போலீஸ் கெடுபிடி இந்த ஆண்டு கடுமையாக இருந்ததால் மதுபானங்களை அங்கு குடிப்பதற்கு பதிலாக வாங்கி சென்றனர்.

    இதனால் கடந்த ஆண்டை விட புத்தாண்டு விற்பனை அதிகரித்துள்ளது. 31 மற்றும் 1-ந்தேதி 2 நாட்களும் சேர்த்து சுமார் ரூ.1000 கோடிக்கு மது விற்பனை ஆகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 31-ந்தேதி மட்டும் ரூ.610 கோடிக்கு மது விற்பனை நடந்ததாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் ஆகிய 5 மண்டலங்களிலும் கடந்த காலத்தை விட மது விற்பனை அதிகரித்துள்ளது.

    அனுமதி இல்லாமல் பல இடங்களில் பார்களும் நடந்தன. நேற்று புதிய ஆண்டிலும் மது பிரியர்கள் வழக்கம் போல் கடைகளிலும், வீடுகளிலும் தங்கள் நண்பர்களோடு உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    பண்ணை வீடுகள், ரிசார்ட், நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட அனைத்திலும் புத்தாண்டு மது விற்பனை அமோகமாக இருந்தன.

    Next Story
    ×