search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வடமாநிலத்தவர் தாக்கப்படுவதாக வெளியான போலி வீடியோ காட்சிகள்- பீகார் ஸ்டூடியோவில் தயாரித்ததாக கைதான 3 பேர் வாக்குமூலம்
    X

    வடமாநிலத்தவர் தாக்கப்படுவதாக வெளியான போலி வீடியோ காட்சிகள்- பீகார் ஸ்டூடியோவில் தயாரித்ததாக கைதான 3 பேர் வாக்குமூலம்

    • போலி வீடியோ வழக்கில் முக்கிய குற்றவாளியான ராகேஷ் ரஞ்சன்குமார் அளித்துள்ள வாக்குமூலத்தில் மணீசின் பெயரையும் கூறி இருக்கிறார்.
    • போலி வீடியோக்களை எடுத்து கொடுத்தால் பணம் தருவதாக மணீஷ் உறுதி அளித்திருந்தார்.

    சென்னை:

    தமிழகத்தில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற போலி வீடியோக்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

    குறிப்பாக பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட வடமாநில தொழிலாளர்களே அதிக அளவில் தாக்கப்பட்டிருப்பதாகவும், தமிழகத்தில் கட்டி வைத்து தாக்கப்பட்டதில் 12 பேர் உயிரிழந்து விட்டதாகவும் பீதியை ஏற்படுத்தும் வகையில் பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டன.

    இந்த விவகாரம் பீகார் சட்டமன்றத்திலும் எதிரொலித்தது. அம்மாநில பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் இந்த பிரச்சினையை எழுப்பினார்கள்.

    இதையடுத்து பீகார் மற்றும் தமிழக அரசுகள் ஒன்றிணைந்து இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டன. இதில் தமிழகத்தில் பணிபுரியும் வடமாநிலத்தவர்கள் எந்த பிரச்சினையும் இன்றி பாதுகாப்புடன் பணிபுரிந்து வருவது தெரியவந்தது.

    இதையடுத்து போலி வீடியோக்களை வெளியிட்டவர்கள் மீது தமிழக போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். திருப்பூர், கிருஷ்ணகிரி, தூத்துக்குடி மாவட்டங்களில் இது தொடர்பாக 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 3 பேர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் தலைமறைவாக உள்ள 8 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். போலி வீடியோ வெளியிட்டவர்களை பிடிக்க டெல்லி, பீகார், காஷ்மீர், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தமிழக போலீசார் முகாமிட்டு தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    இந்த நிலையில் போலி வீடியோக்கள் திட்டமிட்டே தயாரிக்கப்பட்டு பிரச்சினையை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் வேண்டுமென்றே வெளியிடப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

    பீகாரில் இந்த வீடி யோவை தயாரித்து வெளியிட்ட 3 பேரை அம்மாநில போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதுபற்றிய பரபரப்பான தகவல்கள் வருமாறு:-

    பீகார் மாநிலம் பாட்னாவில் பெங்காலி டோலா என்ற பகுதியில் வசித்து வருபவர் ராஜ்குமார் பிரசாத் குப்தா. பழ வியாபாரியான இவரது வீட்டை சிலர் வாடகைக்கு கேட்டுள்ளனர். ஸ்டூடியோ வைக்கப்போவதாக ராகேஷ் ரஞ்சன் குமார்சிங் என்பவரும் அவரது நண்பர்கள் சிலரும் கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து பிரசாத் குப்தா தனது வீட்டை வாடகைக்கு கொடுத்துள்ளார்.

    இந்த வீட்டில் உள்ள ஒரு அறையை ஸ்டூடியோ போல மாற்றி சினிமா சூட்டிங் எடுப்பது போல் ராகேஷ் ரஞ்சன் குமார் சிங் என்பவரும் அவரது கூட்டாளிகள் இருவரும் திட்டம் போட்டு வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவது போல போலியான வீடியோக்களை தயாரித்துள்ளனர்.

    வடமாநில தொழிலாளர்களாக நடிப்பதற்கு அனில் யாதவ், ஆதித்ய குமார் ஆகிய 2 பேர் உள்பட சிலரை ஸ்டூடியோவுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். கடந்த 1-ந்தேதி அன்று இந்த வீடியோக்களை ராகேஷ் ரஞ்சன்குமார் சிங்கும் அவருடன் சேர்ந்தவர்களும் எடுத்துள்ளனர். நடிப்பதற்காக அழைத்துச் செல்லப்பட்ட நபர்களுக்கு ரத்தம் வருவது போல மேக்கப் போட்டு அதன் மேல் கட்டு போட்டுள்ளனர். இதற்கு தேவையான காட்டன் துணி, கத்திரிகோல் உள்ளிட்ட பொருட்களை பாட்னாவில் உள்ள மருந்து கடையில் வாங்கி பயன்படுத்தி உள்ளனர்.

    இந்த வீடியோக்களை செல்போனிலேயே ராகேஷ் ரஞ்சன்குமார் சிங் எடுத்துள்ளார். பின்னர் கடந்த 6-ந்தேதி இந்த போலி வீடியோக்களை யூடியூப் சேனல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கொடுத்துள்ளனர்.

    இதன் பின்னரே போலி வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. பீகாரில் எதிர்க்கட்சியாக உள்ள பாரதிய ஜனதாவும் இந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி பீகார் அரசை குற்றம் சாட்டிய சம்பவங்களும் அரங்கேறின.

    இந்த நிலையில்தான் போலி வீடியோக்கள் திட்டமிட்டு தயாரிக்கப்பட்டவை என்பதை பீகார் போலீசார் கண்டுபிடித்து இந்த விவகாரத்துக்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

    போலி வீடியோ விவகாரம் தொடர்பாக ராகேஷ் ரஞ்சன்குமார் சிங் மற்றும் அவரது கூட்டாளிகளான அமன்குமார், ராகேஷ் திவாரி ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை பீகார் மாநில கூடுதல் டி.ஜி.பி. ஜிஜேந்திர சிங் கங்வார் தெரிவித்துள்ளார்.

    இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள். வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக 50 போலி வீடியோக்களை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். இது தொடர்பாக 42 சமூக வலைதளங்களுக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளனர்.

    போலி வீடியோக்களை வெளியிட்டவர்களில் மணீஷ் என்பவரும் ஒருவர். இவர் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் என்று அம்மாநிலத்தின் ஆளும் கட்சியான ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். மணீஷ் ஆர்.எஸ்.எஸ். சீருடையில் இருக்கும் போட்டோக்களையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர். இதற்கிடையே போலி வீடியோ விவகாரத்தில் இவரும் முக்கிய பங்காற்றி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற போலியான வீடியோக்களை தயாரித்து கொடுத்தால் தனது யூ டியூப்பில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி விடலாம் என்று அவர் கூறி இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    போலி வீடியோ வழக்கில் முக்கிய குற்றவாளியான ராகேஷ் ரஞ்சன்குமார் அளித்துள்ள வாக்குமூலத்தில் மணீசின் பெயரையும் கூறி இருக்கிறார். போலி வீடியோக்களை எடுத்து கொடுத்தால் பணம் தருவதாக மணீஷ் உறுதி அளித்திருந்தார்.

    பணத்துக்கு ஆசைப்பட்டே நாங்கள் வீடியோவை எடுத்தோம் என்றும் ராகேஷ் ரஞ்சன் குமார்சிங் கூறியிருப்பதாக பரபரப்பான தகவல்களையும் போலீசார் வெளியிட்டுள்ளனர். இதையடுத்து மணீசை கைது செய்யும் நடவடிக்கைகளில் போலீசார் இறங்கியுள்ளனர்.

    ஆர்.எஸ்.எஸ். பிரமுகரான மணீஷ் 2020-ம் ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டவர் ஆவார். அங்குள்ள சான்பாடியா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு அவர் தோல்வி அடைந்துள்ளார்.

    இதையடுத்து பீகார் அரசியலில் மணீஷ் எந்தெந்த அரசியல் பிரமுகர்களுடன் தொடர்பில் உள்ளார்? அவரது அரசியல் பின்புலம் என்ன? என்பது பற்றிய விசாரணையிலும் போலீசார் இறங்கியுள்ளனர்.

    யாருடைய தூண்டுதலின் பேரிலாவது மணீஷ் செயல்பட்டாரா? என்பது பற்றிய விசாரணையும் முடுக்கி விடப்பட்டுள்ளது. இதன் முடிவில் போலி வீடியோ விவகாரத்தில் மேலும் பலர் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×