search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அ.தி.மு.க. தொண்டர்கள் ஒருங்கிணைந்து விரைவில் புதிய சகாப்தம் எழுதுவார்கள்- ஓ.பன்னீர்செல்வம்
    X

    அ.தி.மு.க. தொண்டர்கள் ஒருங்கிணைந்து விரைவில் புதிய சகாப்தம் எழுதுவார்கள்- ஓ.பன்னீர்செல்வம்

    • விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாடு என்பதும் தி.மு.க. கூட்டணியின் நாடகம்தான்.
    • அ.தி.மு.க. தொண்டர்களும், பொதுமக்களும் இன்னமும் என்பக்கம்தான் இருக்கிறார்கள் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

    காரைக்குடி:

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் இருந்து ஓரங்கட்டப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனக்கான இடத்தை உறுதி செய்வதற்காக பல்வேறு சட்டப்போராட்டங்களை முன்னெடுத்தார். ஆனால் அனைத்திலும் அவருக்கு பாதகமாகவே முடிவுகள் வந்தன. இதற்கிடையே அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்குக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையேயான பனிப்போர், கருத்து விமர்சனங்கள் தொடர்ந்தன.

    ஒரு கட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் கருத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மீண்டும் ஓ.பி.எஸ்., சசிகலா, தினகரன் ஆகியோரை அ.தி.மு.க.வில் சேர்க்கும் எண்ணமே இல்லை என்றும், அது முற்றிலும் சாத்தியமற்றது என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். ஆனாலும் சசிகலா, டி.டி.வி.தினகரனுடன் கைகோர்த்துள்ள ஓ.பன்னீர்செல்வம் கண்டிப்பாக அ.தி.மு.க. ஒன்றிணையும் என்று தொடர்ந்து கூறி வருகிறார்.

    அதனை மெய்ப்பித்து காட்டுவேன் என்றும், தனக்கான தொண்டர்கள் பலத்தை நிரூபிப்பேன் என்றும் சபதம் எடுத்த அவர் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டார். 33 சதவீத வாக்குகளுடன் மூன்றாவது இடத்தை பிடித்தார். அ.தி.மு.க. ஒன்றிணைந்து 2026-ல் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டு தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று கூறிவருகிறார்.

    இந்தநிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வந்திருந்த ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் பிறந்தவர்கள் அனைவருமே தந்தை பெரியாரின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற சூழ்நிலை இருந்து வருகிறது. அதாவது, சாதாரண மனிதர் கூட உயர்ந்த நிலைக்கு செல்ல பெரியார்தான் காரணம்.

    அ.தி.மு.க.வை எந்த நோக்கத்திற்காக எம்.ஜி.ஆர். தொடங்கினாரோ, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா யாராலும் வெல்ல முடியாத இயக்கமாக உருவாக்கினாரோ அதனை நிறைவேற்றும் வகையில் தொண்டர்கள் அனைவரும் இணைந்து புதிய சகாப்தத்தை எழுதுவார்கள்.

    ஒன்றிணைந்த அ.தி.மு.க. விரைவில் மலரும். அ.தி.மு.க. மீண்டும் ஒருங்கிணைய வேண்டும் என்பதையே ஒட்டுமொத்த தொண்டர்களும், பொதுமக்களும் எதிர்பார்க்கிறார்கள், விரும்புகிறார்கள். அவ்வாறு அனைவரும் இணைகிற காலம் வெகு தூரத்தில் இல்லை. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் இருந்தபடி சசிகலா, டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோருடன் அ.தி.மு.க. மீண்டும் உருவெடுக்கும்.

    தி.மு.க.வின் 'பி' டீமாக அ.தி.மு.க. இருப்பதாகவும், அவ்வாறே எடப்பாடி பழனிசாமி செயல்படுவதாகவும் தமிழக மக்களே பேசி வருகிறார்கள். எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தொடரப்பட்ட அ.தி.மு.க. தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு இறுதியானவை அல்ல. சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதல்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் 6 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் தொண்டர்களின் அ.தி.மு.க. வெற்றி பெறும்.

    ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என்று திருமாவளவன் கேட்டது தி.மு.க. கூட்டணி கட்சிகள் நடத்தும் நவயுக நாடகம். அதற்கெல்லாம் நான் பதில் கூற முடியாது. அதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாடு என்பதும் தி.மு.க. கூட்டணியின் நாடகம்தான்.

    மது ஒழிப்பு மாநாடு என்பது முடிந்துபோன விஷயம். இந்த மாநாடு பொதுமக்கள் நம்பக்கூடிய நாடகமாகக்கூட இல்லை. பாராளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் சின்னம் மற்றும் கொடி இல்லாமலேயே போட்டியிட்ட எனக்கு தொண்டர்கள் 33 சதவீத வாக்கினை அளித்துள்ளார்கள். இந்தியாவிலேயே 33 சதவீத வாக்குகள் பெற்ற ஒரே சுயேட்சை வேட்பாளர் நான் மட்டுமே. இதன்மூலம் அ.தி.மு.க. தொண்டர்களும், பொதுமக்களும் இன்னமும் என்பக்கம்தான் இருக்கிறார்கள் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×