என் மலர்
தமிழ்நாடு
பெருங்களத்தூர் மேம்பாலத்தின் மற்றொரு பகுதி நாளை திறப்பு
- ஜி.எஸ்.டி.சாலையில் செங்கல்பட்டு-தாம்பரம் மார்க்கமான ஒரு வழிப்பாதை 2022 செப்டம்பர் மாதம் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.
- சீனிவாசா நகர் பாதையை மக்கள் பயன்பாட்டுக்கு நாளை மாலை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைக்கிறார்.
பெருங்களத்தூர்:
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெருங்களத்தூர் ரெயில் நிலையம் அருகில் மாநில நெடுஞ்சாலைத்துறை, ரெயில்வே இணைந்து ரூ.234 கோடியில் மேம்பாலம் கட்டும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
இதில் ஜி.எஸ்.டி.சாலையில் செங்கல்பட்டு-தாம்பரம் மார்க்கமான ஒரு வழிப்பாதை 2022 செப்டம்பர் மாதம் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஜி.எஸ்.டி. சாலையில், வண்டலூர் மார்க்கமாக பணிகள் நடந்து வருகின்றன.
மற்றொரு புறம், ரெயில்வே தண்டவாளத்தை கடந்து பீர்க்கன்காரணை சீனிவாசா நகரில் இறங்கும் மற்றொரு பாதைக்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வந்தன. பணிகள் முடிந்து சில வாரங்களாக இப்பாதை திறக்கப்படாமல் இருந்ததால் மக்களிடம் எதிர்ப்பு எழுந்தது.
இந்த நிலையில் சீனிவாசா நகர் பாதையை மக்கள் பயன்பாட்டுக்கு நாளை (புதன்கிழமை) மாலை 3 மணிக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைக்கிறார்.