search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அகில பாரத இந்து மகா சபாவின் மாநில பொதுச்செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
    X

    அகில பாரத இந்து மகா சபாவின் மாநில பொதுச்செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

    • வருவாய்த் துறை மற்றும் இந்து அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    உளுந்தூர்பேட்டை:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை விருத்தாசலம் சாலையில் உள்ள கேசவன் நகரில் வசித்து வருபவர் பெரி.செந்தில். இவர் அகில பாரத இந்து மகாசபையின் பொதுச் செயலாளராக இருந்து வருகிறார்.

    அவர் இன்று காலை வீட்டிற்கு வெளியில் வந்து பார்த்தபோது, வாசலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இது தொடர்பாக உளுந்தூர்பேட்டை போலீசாருக்கு பெரி.செந்தில் தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ், இன்ஸ்பெக்டர் குணபாலன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். அவரது வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    அதில் நேற்று நள்ளிரவு 12.10 மணியளவில் 40 வயது மதிக்கத்தக்க மர்ம நபர், பெரி.செந்தில் வீட்டிற்கு வருவதும், பெட்ரோல் நிரப்பபட்ட பாட்டிலில் தீயை வைத்து வீட்டின் வாசலில் வீசி விட்டு அங்கிருந்து செல்லும் காட்சியும் பதிவாகி இருந்தது.

    அந்த பதிவை கைப்பற்றிய போலீசார், பெட்ரோல் குண்டு வீசிய நபர் யார்? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையம் எதிரில் முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான இடம் பலரின் ஆக்கிரமிப்பில் உள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி, அதனை கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என அகில பாரத இந்து மகா சபா சார்பில் வலியுறுத்தப்பட்டது.

    இது தொடர்பான கூட்டம் உளுந்தூர்பேட்டை தாசில்தார் தலைமையில் 2 நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட அகில பாரத இந்து மகா சபாவின் பொதுச்செயலாளர் பெரி.செந்தில், கோவில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இதற்கு வருவாய்த் துறை மற்றும் இந்து அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். எனவே நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்களில் யாரேனும் பெரி.செந்தில் வீட்டில் பெட்ரோல் குண்டுகளை வீசினார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

    Next Story
    ×