search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கிறிஸ்துமஸ்-புத்தாண்டு கொண்டாட்டம்: சுற்றுலா நகரங்களுக்கு விமான கட்டணம் பல மடங்கு உயர்வு
    X

    கிறிஸ்துமஸ்-புத்தாண்டு கொண்டாட்டம்: சுற்றுலா நகரங்களுக்கு விமான கட்டணம் பல மடங்கு உயர்வு

    • விமான பயணத்திற்கான தேவை அதிகரித்து வருவதால் கட்டணம் பல மடங்கு உயர்ந்து வருகிறது.
    • வழக்கமாக டிசம்பர் மாதத்தில் கட்டணம் அதிகமாக இருக்கும்.

    சென்னை:

    பள்ளி, கல்லூரிகளுக்கு வருகிற 23-ந்தேதி வரை மட்டுமே வகுப்புகள் நடைபெறுகிறது. அரையாண்டு தேர்வு முடிந்தவுடன் 24-ந்தேதி முதல் ஜனவரி 1-ந்தேதி வரை விடுமுறை விடப்பட உள்ளது.

    கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்தை நகரங்களுக்கு சென்று கொண்டாட ஏற்கனவே பலர் திட்டமிட்டு முன்பதிவு செய்துள்ளனர்.

    ரெயில்களில் அனைத்து வகுப்புகளும் நிரம்பி விட்டதால் விமானங்களில் பயணம் செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள். இந்த விடுமுறையை மகிழ்ச்சியுடன் கொண்டாட உள்நாடு மற்றும் வெளிநாடு பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டு மேற்கொண்டு வருகின்றனர்.

    விமான பயணத்திற்கான தேவை அதிகரித்து வருவதால் கட்டணம் பல மடங்கு உயர்ந்து வருகிறது. வழக்கமாக டிசம்பர் மாதத்தில் கட்டணம் அதிகமாக இருக்கும். இந்த ஆண்டு கொரோனா தொற்று பாதிப்பு உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இல்லாததால் கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டு உள்ளன.

    இதனால் பன்னாட்டு விமான கட்டணம் மட்டுமின்றி உள்நாடுகளுக்கு இடையே இயக்கப்படும் விமானங்களின் கட்டணமும் அதிகரித்துள்ளது.

    சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்ய இடம் இல்லாத நிலை உருவாகி உள்ளது. தினசரி எல்லா விமானங்களும் முழு அளவில் நிரம்பி செல்கின்றன. ஒருசில நாடுகளுக்கு இன்னும் சுற்றுலா விசா கிடைப்பதில் சிரமம் உள்ளதாக பயண ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    அமெரிக்காவுக்கு சுற்றுலா விசாவிற்கு 2025 மார்ச் மாதத்தில் பெறக்கூடிய நிலை உள்ளது. ஜெர்மனிக்கு செல்ல சுற்றுலா விசா நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

    ஸ்ரீநகர், சண்டிகர், கோவா, கொச்சி உளளிட்ட உள்நாட்டு சுற்றுலா தலங்களுக்கு விமான கட்டணம் உயர்ந்துள்ளது. கோவாவுக்கு வழக்கமாக ரூ.4500 கட்டமாகும். ஆனால் தற்போது ரூ.13000, 14,000 ஆக உள்ளது.

    இதே போல் கொச்சிக்கு ரூ.4000 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.10 ஆயிரமாக அதிகரித்து உள்ளது. இது குறித்து விமான டிக்கெட் ஏஜென்சி ஒருவர் கூறியதாவது:-

    டிசம்பர் 23, 24 ஆகிய தேதிகளில் அதிகளவில் விமான பயணம் உள்ளது. ரெயில் டிக்கெட் கிடைக்காததால் பலர் தற்போது விமான பயணத்துக்கு மாறி வருகிறார்கள். மத்திய, மாநில அரசு ஊழியர்கள் ஸ்ரீநகர், சண்டிகருக்கு அதிகளவில் இந்த விடுமுறையில் செல்கிறார்கள்.

    ஜனவரி முதல் வாரம் வரை விமான கட்டணம் அதிகளவில் உயரும். மேலும் கோவை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி விமான கட்டணமும் தற்போது அதிகரித்துள்ளது. இந்த நகரங்களுக்கு வழக்கமாக ரூ.3000 முதல் 5 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருக்கும். தற்போது ரூ.8000 ஆக உயர்ந்துள்ளது. இது வருகிற நாட்களில் மேலும் உயரும்.

    டெல்லிக்கு வழக்கமாக ரூ.8000 ஆக இருந்த கட்டணம் கடந்த சில நாட்களாக ரூ.17 ஆயிரமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×