என் மலர்
தமிழ்நாடு
தமிழகம் முழுவதும் போலீசார் விடியவிடிய வாகன சோதனை
- திருப்பூர் ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் பயணிகளின் உடைமைகளை மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்த பிறகே அனுப்பி வைக்கின்றனர்.
- மாவட்ட எல்லைகள் மற்றும் மாநகர எல்லைகளில் உள்ள போலீஸ் சாதனை சாவடிகளில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை:
கர்நாடக மாநிலம் மங்களூரு நகரின் நாகுரி பகுதியில் நேற்று முன்தினம் மாலை ஆட்டோ ஒன்று மர்மமான முறையில் வெடித்தது.
இதுதொடர்பாக போலீசார் விசாரித்தபோது, குக்கர் குண்டு வெடித்தது தெரியவந்தது. இது பயங்கரவாத செயல் என்று போலீசார் கூறியுள்ளனர். மேலும் இது தற்கொலைப்படை தாக்குதலாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. கோவையில் நடந்த சம்பவத்தை போலவே இந்த சம்பவமும் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மங்களூரில் குக்கர் குண்டு வெடித்த சம்ப வத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள் ளனர். அதுபோன்று ஏதாவது அசம்பாவித சம்பவம் நடந்துவிடக் கூடாது என்பதற்காக போலீசார் விடிய விடிய வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் மாவட்ட எல்லைகளிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
திருப்பூரில் போலீசார் நேற்று இரவு முதல் இன்று காலை வரை மாநகர் பகுதி முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 24 ரோந்து வாகனங்களில் மாநகர் முழுவதும் ரோந்து சுற்றி வந்தனர். இரவில் திருப்பூர் மாநகருக்குள் வந்த அனைத்து வாகனங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.
மேலும் விடுதிகள், லாட்ஜ்களில் சந்தேகப்படும் படியான நபர்கள் யாரும் தங்கியுள்ளனரா? என்று சோதனை நடத்தப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட தாராபுரம், பல்லடம், உடுமலை, காங்கயம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் இரவு முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தமிழக-கேரள எல்லையான உடுமலை சோதனை சாவடியில் கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் சோதனை நடத்தப்பட்ட பிறகே அனுப்பப்படுகிறது.
திருப்பூர் ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் பயணிகளின் உடைமைகளை மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்த பிறகே அனுப்பி வைக்கின்றனர்.
நெல்லையில் வழக்கமாக நடைபெறும் இரவு நேர ரோந்துபணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மாவட்ட எல்லைகள் மற்றும் மாநகர எல்லைகளில் உள்ள போலீஸ் சாதனை சாவடிகளில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள் அந்த வழியாக வரும் அனைத்து வாகனங்களையும் முழுமையாக பரிசோதனை செய்த பிறகே அனுப்பி வைக்கின்றனர். வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாரும் முகாமிட்டு முழுமையான சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் சந்திப்பு ரெயில் நிலையத்தில் நேற்று இரவு முதல் சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இன்று காலையில் சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட திருச்செந்தூர், செங்கோட்டை பயணிகள் ரெயில் மற்றும் சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு வந்தடைந்த அனந்தபுரி, நெல்லை, குமரி எக்ஸ்பிரஸ் ரெயில்களில் சோதனை நடத்தப்பட்டது.
தென்காசி மாவட்டத்திலும் பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்களில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். தமிழக-கேரள எல்லையான புளியரை சோதனை சாவடியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
மதுரை மாவட்டத்தில் மக்கள் கூடும் இடங்களான பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள், மார்க்கெட்டுகள் வழிபாட்டுத் தலங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முக்கிய இடங்களில் நீண்ட நேரமாக நிறுத்தப்படும் வாகனங்களையும் போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.
அழகர் கோவில், ஒத்தக்கடை, திருமங்கலம், கப்பலூர், உசிலம்பட்டி, வடக்கம்பட்டி, அலங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் உத்தரவின் பேரில் சி.ஆர்.பி.எப். போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் தமிழக-கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. கர்நாடகாவில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பின்பே அனுமதிக்கப்படுகிறது. கார் மற்றும் பஸ்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் கார் மற்றும் பஸ் பயணிகளிடம் என்ன காரணத்துக்காக தமிழகத்துக்கு வருகிறீர்கள் என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
லாரி மற்றும் சரக்கு வாகனங்களையும் போலீசார் சோதனை செய்து வருகின்றனர். டிரைவர்கள் பெயர் விபரம் குறித்து கேட்டறிந்தனர்.
இதே போல் கொடுமுடி நொய்யல் சோதனை சாவடி, தாளவாடி சோதனைசாவடி, பண்ணாரி சோதனை சாவடி, கருங்கல்பாளையம் சோதனை சாவடி, விஜயமங்கலம், பர்கூர், லட்சுமி நகர் சோதனை சாவடிகளிலும் போலீசார் விடிய, விடிய வாகன சோதனை நடத்தினர்.
தமிழக-கர்நாடக எல்லையான ஓசூர் ஜூஜூவாடி சோதனை சாவடியில் போலீசார் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்போது அந்த வழியாக வரும் அனைத்து வாகனங்களையும் தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை செய்து வருகிறார்கள். இன்று 2-வது நாளாக தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பூனப்பள்ளி, குமலாபுரம், கக்கனூர், குருவிநாயனபள்ளி, வேப்பனப்பள்ளி, பஞ்சப்பள்ளி உள்பட 9 இடங்களில் போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.
தருமபுரி மாவட்டத்தில் காரிமங்கலம், பாலக்கோடு அடுத்த செட்டிப்பட்டி, பஞ்சப்பள்ளி உள்பட மாவட்ட எல்லையில் போலீசார் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கோவையில் ஏற்கனவே கார் வெடித்த சம்பவம் நிகழ்ந்ததால் கோவையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணியில் 1,500-க்கும் மேற்பட்ட போலீசாா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
கோவையில் இருந்து கா்நாடகத்துக்குச் செல்லும் வழித்தடத்திலுள்ள சோதனைச் சாவடிகளில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அதிக அளவில் கூடும் இடங்கள், ரெயில் நிலையங்கள் மற்றும் பஸ் நிலையங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ரெயில் நிலையத்தில் மோப்ப நாய் உதவியுடன் மெட்டல் டிடெக்டா் மூலம் பயணிகளின் உடைமைகள் பரிசோதிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டனா். மேலும் கோவில்கள் முன்பு போடப்பட்டு இருந்த பாதுகாப்பு தொடர்ந்து நீடிக்கிறது.
மங்களூர் குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தஞ்சை நகரில் நேற்று காலை முதலே போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தஞ்சை தொல்காப்பியர் சதுக்கம், புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வழியாக வரும் அனைத்து இரு சக்கர வாகனம், கார், லாரி உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் வழிமறித்து நிறுத்தி ஏதாவது மர்ம பொருள் உள்ளதா ? என்று சோதனை நடத்தினர்.
கும்பகோணம், பட்டுக்கோட்டை, பேராவூரணி உள்ளிட்ட மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் பகல், இரவு என அனைத்து நேரங்களிலும் வாகன சோதனை நடந்து வருகிறது.
புதுவையில் கிழக்கு கடற்கரை சாலை கொக்கு பார்க் அருகே போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தினர். சந்தேகப்படும் படியாக யாராவது வந்தால் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
மேலும் எல்லை பகுதிகளான கோரிமேடு, கன்னியகோவில், கனகசெட்டி குளம் உள்ளிட்ட இடங்களிலும் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகிறார்கள்.