search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் உடன் கூட்டணி.. சீமான் ஓபன் டாக்
    X

    2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் உடன் கூட்டணி.. சீமான் ஓபன் டாக்

    • விஜய் எனது தம்பி, பல முறை அவருக்கு ஆதரவாக நான் பேசியுள்ளேன்.
    • நல்ல தலைவர்கள் இல்லை என்று விஜய் கூறவில்லை. போதிய தலைவர்கள் இல்லை என்றுதான் கூறியுள்ளார்.

    சென்னை:

    நடிகர் விஜய் வழங்கி வரும் கல்வி ஊக்கத் தொகையை பாராட்டி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எக்ஸ் வலைதளத்தில் பதிவு ஒன்றை இன்று வெளியிட்டிருந்தார். அதில் குறிப்பிட்டிருப்பதாவது:-

    கல்வி என்பது மானுட உரிமை! அதைக் கொடுக்க மறுப்பது மாபெரும் கொடுமை; கல்வியை அனைவருக்கும் தரமாக, சரியாக, சமமாக வழங்க வேண்டியது ஒரு நல்ல அரசின் தலையாயக் கடமை!

    ஆனால், தற்காலச்சூழலில் கல்வி என்பது தனியார் மயமாக்கப்பட்டு, மதிப்புக் கூட்டப்பட்ட விற்பனை பண்டம்போல, கல்விக் கட்டணம் என்ற பெயரில் பெரும் பகற்கொள்ளை நடக்கின்றது;

    'பணம் படைத்தவர்களால் மட்டுமே தரமான கல்வியைப் பெற முடியும், ஏழைகளுக்கு நல்ல கல்வி என்பது எட்டாக்கனி' எனும் ஏற்றத்தாழ்வு மிகுந்த சமகாலத்தில், ஏழை - பணக்காரர் என்ற எவ்வித பாகுபாடுமின்றி, தமிழ்நாடு முழுவதும் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவ - மாணவியரை அழைத்து, பாராட்டுச்சான்றிதழுடன், உயர்கல்விக்கான உதவித் தொகையும் வழங்கி ஊக்கப்படுத்துகின்ற உன்னதப் பணியைச் செய்யும், என்னுயிர் இளவல், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர், என் அன்புத்தளபதி விஜய்க்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இந்த பாராட்டு தொடர்பாக சீமான் அளித்துள்ள பேட்டியில், 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் விஜயுடன் கூட்டணி அமைப்பதற்கான அஸ்திவாரமாக இதனை எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். இதுபற்றி சீமான் மேலும் கூறியிருப்பதாவது:-

    கல்வியில் சிறந்த மாணவர்களை அழைத்து விஜய் பாராட்டி வருவது உன்னதமான பணியாகும்.

    2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விஜயுடனான கூட்டணிக்கு அஸ்திவாரமாக தான் அவரை பாராட்டியதை எடுத்துக் கொள்ளலாமா? என்று கேட்கிறீர்கள். அப்படியும் எடுத்துக் கொள்வதில் தவறு எதுவுமில்லையே, நிச்சயமாக எடுத்துக் கொள்ளலாம்.

    இருப்பினும் விஜய் எனது தம்பி, பல முறை அவருக்கு ஆதரவாக நான் பேசியுள்ளேன். அவரது பெயரில் தபால் தலை வெளியிட்ட போது பலரும் எதிர்த்தனர். ஆனால் நான்தான் அதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்தேன். 'கத்தி', 'தலைவா' படங்களுக்கு எதிர்ப்பு வந்தபோதும் அவருக்கு ஆதரவாக நின்றேன். தமிழகத்தில் நல்ல தலைவர்கள் இல்லை என்று விஜய் கூறவில்லை. போதிய தலைவர்கள் இல்லை என்றுதான் கூறியுள்ளார்.

    போதை பொருள் தொடர்பான அவரது பேச்சு மாணவர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது.

    இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.

    பின்னர் அவரிடம் 2026-ம் ஆண்டு தேர்தலில் விஜயுடன் கூட்டணி... என்று கூறி இருப்பதை கூட்டணி உறுதி என்று எடுத்துக் கொள்ளலாமா? என்று கேட்டபோது அதுபற்றி இதற்கு மேலும் கூற முடியாது. தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ளன. அப்போது தான் பேசி முடிவெடுப்போம் என்றார்.

    விஜயுடனான கூட்டணி பற்றி சீமான் தெரிவித்துள்ள இந்த கருத்து அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×