என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மாணவர்களின் மருத்துவ கனவு பறி போவதை தடுக்க தமிழக அரசு சட்ட போராட்டம் செய்ய வேண்டும்- சீமான்
- அரசுப்பள்ளி மாணவர்கள் 80 சதவீதத்தினர் இந்த ஆண்டு தேர்ச்சிப்பெறவில்லை.
- ஒரே ஒரு அரசுப்பள்ளி மாணவர்கூட நடப்பாண்டில் மருத்துவ மாணவராக தேர்வாகியிருக்க முடியாது.
சென்னை:
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நீட் தேர்வில் தோல்வி அடைந்த விரக்தியில் சென்னை திருமுல்லைவாயலை சேர்ந்த தங்கை லக்சனா சுவேதா தற்கொலை செய்துகொண்ட செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.
அரசுப்பள்ளி மாணவர்கள் 80 சதவீதத்தினர் இந்த ஆண்டு தேர்ச்சிப்பெறவில்லை. இதுதான் மாணவர்களின் தற்கொலையை தடுக்க தி.முக. அரசு எடுத்த நடவடிக்கையின் லட்சணமா? அ.தி.மு.க. அரசு கொண்டுவந்த அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு மட்டும் இல்லையென்றால் ஒரே ஒரு அரசுப்பள்ளி மாணவர்கூட நடப்பாண்டில் மருத்துவ மாணவராக தேர்வாகியிருக்க முடியாது என்பதே நடைமுறை உண்மையாகும்.
இந்திய ஒன்றிய அளவில் கல்வித்தரத்தில் இரண்டாம் இடத்தில் உள்ள தமிழ்நாடு, நீட் தேர்வு தேர்ச்சி விகிதத்தில் இந்த ஆண்டு 29-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், கல்வியில் தமிழ்நாட்டைவிட பின் தங்கியுள்ள டெல்லி, சத்தீஸ்கர், பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் 70 சதவீதம் அளவிற்கு வெற்றிப்பெற்று முதல் 10 இடங்களுக்குள் வந்துள்ளது நீட் தேர்வில் மிகப்பெரிய முறைகேடுகள் நடைபெற்றிருப்பதை வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது. இவையெல்லாம் நீட் தேர்வு என்பது கிராமப்புற ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவினை சிதைக்க உருவாக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்துகிறது.
ஆகவே, நீட் தேர்வால் இனியொரு உயிரோ, ஒரு மாணவரின் மருத்துவக்கனவோ பறிபோகாது தடுக்கத் தமிழ்நாடு அரசு உடனடியாக உச்ச நீதி மன்றத்தில் கிடப்பில் இருக்கிற நீட் தேர்வு மறுசீராய்வு வழக்கை விரைந்து விசாரிக்கக்கோரி சட்டப்போராட்டம் செய்ய வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






