search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மெரினா கடற்கரை குதிரைகளுக்கு லைசென்ஸ்- தமிழக கால்நடை நலவாரியம் முடிவு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    மெரினா கடற்கரை குதிரைகளுக்கு லைசென்ஸ்- தமிழக கால்நடை நலவாரியம் முடிவு

    • மெரினா கடற்கரையில் குதிரைகளை சவாரிக்கு பயன்படுத்துவோர் உரிமம் பெறவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
    • ஆரோக்கியமாக பராமரிக்கப்படவேண்டும் என்பதற்காகவே அவற்றுக்கு லைசென்ஸ் வழங்க பரிந்துரைத்துள்ளோம் என்றார்.

    சென்னை:

    சென்னை மெரினா கடற்கரையில் குதிரை சவாரி பிரபலம். சவாரி தொழிலில் ஏராளமான குதிரைகள் இருக்கின்றன. இது தவிர குதிரை வண்டிகளும் ஆங்காங்கே உள்ளன. இந்த வண்டிகளிலும் பலர் சவாரி செல்வது வழக்கம். மேலும் பந்தயத்துக்காகவும் சில குதிரைகளை வளர்க்கின்றனர். இதனிடையே சில இடங்களில் குதிரை உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகள் துன்புறுத்தப்படுவதாக கால்நடை நலவாரியத்துக்கு புகார்கள் வந்தன. மேலும் சில குதிரைகள் போதிய பராமரிப்பு இல்லாமல் இறப்பதாகவும் தெரியவந்தது. இதை தடுக்க தமிழ்நாடு கால்நடை நலவாரியம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக குதிரைகளுக்கு மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து உரிமம் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    குறிப்பாக சென்னை மெரினா கடற்கரையில் குதிரைகளை சவாரிக்கு பயன்படுத்துவோர் உரிமம் பெறவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக தமிழ்நாடு கால்நடை நலவாரிய உறுப்பினர் சுருதி வினோத்ராஜ் கூறுகையில், சென்னை மெரினா கடற்கரை பகுதியில் மட்டும் சவாரி உள்ளிட்ட வணிக ரீதியாக 150-க்கும் மேற்பட்ட குதிரைகள் பயன்படுத்தப்படுகின்றன.

    அவற்றை அதன் உரிமையாளர்கள் சரியாக பராமரிப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. அவை ஆரோக்கியமாக பராமரிக்கப்படவேண்டும் என்பதற்காகவே அவற்றுக்கு லைசென்ஸ் வழங்க பரிந்துரைத்துள்ளோம் என்றார்.

    இதற்கிடையே குதிரைகளுக்காக பிரத்யேகமாக சென்னை திருவல்லிக்கேணியில் புகலிடம் அமைக்க சென்னை கலெக்டரிடம் விலங்குகள் உரிமை அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுபற்றி அந்த அமைப்பை சேர்ந்த ஷிரானி பெரேரோ கூறுகையில், நாங்கள் பல ஆண்டுகளாக மெரினா கடற்கரை குதிரைகள் நலனுக்காக உழைத்து வருகிறோம். அவற்றுக்கு சரியான உணவு, பராமரிப்பு கிடைக்க ஏற்பாடு செய்கிறோம். இந்த குதிரைகள் வெயில் மற்றும் மழையால் அவதிப்படுகின்றன. எனவே அவற்றை பாதுகாக்க ஒரே இடத்தில் 200 குதிரைகள் கட்டும் அளவுக்கு புகலிடம் அமைக்க கேட்டுள்ளோம். அதற்கான இடவசதி திருவல்லிக்கேணியில் உள்ளது என்றார்.

    Next Story
    ×