என் மலர்
தமிழ்நாடு
நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகம் போராட்டகளமாக மாறியது: ஆசிரியர்கள் போராட்டம் 8-வது நாளாக நீடிப்பு
- பகுதி நேர ஆசிரியர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் கடந்த 25-ந் தேதி முதல் நடந்து வருகிறது.
- ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் செய்து வருகின்றனர்.
சென்னை:
சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு வாரத்திற்கும் மேலாக முகாமிட்டு போராட்டத்தை முன்னெடுத்து செல்கின்றனர்.
சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் இன்று 5-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
சுமார் 7 ஆயிரம் ஆசிரியர்கள், ஆசிரியைகள் களத்தில் உள்ளதால் தண்ணீர் மட்டும் குடித்து உண்ணாவிரத்தில் ஈடுபட்டதால் இன்று வரை 204 பேர் சோர்வடைந்து மயக்க நிலைக்கு சென்றனர்.
அதில் 182 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. 22 பேருக்கு போராட்ட களத்திலேயே மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆசிரியர் ஸ்ரீதர் என்பவர் கூறியதாவது:-
சமவேலைக்கு சம ஊதியம் கேட்டு 2009-ம் ஆண்டு முதல் போராடி வருகிறோம். 14 வருடமாக போராடினாலும் இதுவரையில் பயன் இல்லை. இடைநிலை ஆசிரியர் பணி செய்து வரும் எங்களை போன்ற மற்ற ஆசிரியர்களுக்கும் எங்களுக்கும் ரூ.20 ஆயிரம் சம்பள வித்தியாசம் உள்ளது. நாளை முதல் எண்ணும் எழுத்தும் பயிற்சி ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகிறது. அதனை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடுகிறோம் என்றார்.
பகுதி நேர ஆசிரியர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் கடந்த 25-ந் தேதி முதல் நடந்து வருகிறது. அவர்களுடன் தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தலைமையில் இணைந்து தற்போது காத்திருப்பு போராட்டம் நடக்கிறது.
மேலும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் நலச் சங்கம் சார்பில் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். 3 இடங்களில் ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் செய்து வருகின்றனர்.
இதனால் டி.பி.ஐ. வளாகத்தில் சுமார் 10 ஆயிரம் பேர் முகாமிட்டு உள்ளனர். விடுமுறை நாட்களில் பள்ளி கல்வி வளாகம் பரபரப்பாக காணப்படுகிறது.