என் மலர்
தமிழ்நாடு
கொரோனா காலகட்டத்தில் குழந்தை பிறப்பு விகிதம் அதிகரிப்பு- தேனி மாவட்டம் முதலிடம்
- தேனி மாவட்டத்தில் உயர் விகித பிறப்பு 36 சதவீதமாக அதிகரித்துள்ளது.
- அரசு ஆஸ்பத்திரிகளில் லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை தினந்தோறும் மேற்கொள்ளப்படுகிறது.
தேனி:
இந்தியாவில் மக்கள் தொகை உலகிலேயே முதலிடம் பிடித்து சீனாவை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.
குடும்ப நலத்துறை அதிகாரிகள் 2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களை ஆய்வு செய்து அவர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்து வருகின்றனர். ஆனால் கொரோனா காலகட்டத்தில் இந்த பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.
அதன் விளைவாக ஒருபெண்ணுக்கு 3 மற்றும் அதற்கு மேல் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உயர் விகித பிறப்பு எனப்படும் இதனை கண்டறிந்து 2 குழந்தைகளுக்கு மேல் மகப்பேறு அடையும் பெண்களுக்கு குடும்ப நல அறுவை சிகிச்சை செய்ய பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட குடும்பநலத்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், தேனி மாவட்டத்தில் உயர் விகித பிறப்பு 36 சதவீதமாக அதிகரித்துள்ளது. தமிழகத்திேலயே இது முதலிடம் ஆகும். இதனை குறைக்க குடும்ப நலத்துறை இலக்கு நிர்ணயித்து லேப்ராஸ்கோப்பி குடும்ப நல அறுவை சிகிச்சை நடத்தி வருகிறோம். கம்பம், பெரியகுளம், அரசு ஆஸ்பத்திரிகளில் லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை தினந்தோறும் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த முறையில் அறுவை சிகிச்சை செய்தால் ஆஸ்பத்திரியில் தங்காமல் ஒரே நாளில் வீட்டுக்கு சென்று விடலாம். தொற்று, வலி இருக்காது என்றார். குறிப்பாக மாவட்டத்தில் மலை கிராமங்களில் உள்ள மக்களிடம் அதிக குழந்தை பேறினால் ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி குடும்ப கட்டுப்பாடு செய்வதன் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.