search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    செஞ்சிக்கோட்டையில் யுனெஸ்கோ குழுவினர் நாளை ஆய்வு
    X

    செஞ்சிக்கோட்டையில் யுனெஸ்கோ குழுவினர் நாளை ஆய்வு

    • கடந்த மாதம் மத்திய அரசு அதிகாரி மற்றும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் செஞ்சிக்கோட்டையை பார்வையிட்டு நடைபெற வேண்டிய பணிகளை ஆய்வு செய்தனர்.
    • நாளை ஒரு நாள் மட்டும் பொதுமக்கள் உட்பட அனைவரும் செஞ்சிக்கோட்டைக்குள் சென்று பார்வையிட அனுமதியில்லை.

    செஞ்சி:

    வரலாற்று சிறப்புமிக்க செஞ்சிக்கோட்டை தற்போது தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இக்கோட்டையை காண தமிழ்நாடு மட்டுமின்றி மற்ற மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து கொண்டிருக்கின்றனர்.

    இந்நிலையில் செஞ்சிக்கோட்டையை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிப்பது சம்பந்தமாக மத்திய அரசு யுனெஸ்கோ குழுவினருக்கு பரிந்துரை செய்தது. அதனை ஏற்று யுனெஸ்கோ குழுவினர் செஞ்சிக்கோட்டையை ஆய்வு செய்ய நாளை (வெள்ளிக்கிழமை) வருகை தர உள்ளனர். இதனை அடுத்து செஞ்சி கோட்டையில் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிதிலமடைந்த சாலைகள் சரி செய்யப்பட்டு புதிய தார்சாலை போடப்பட்டு உள்ளன.

    மேலும் தற்காலிக கழிவறைகள், குடிநீர் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாத காலமாக தொல்லியல் துறை அலுவலர்கள் செஞ்சிக்கோட்டையில் முகாமிட்டு இந்த பணிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் மத்திய அரசு அதிகாரி மற்றும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் செஞ்சிக்கோட்டையை பார்வையிட்டு நடைபெற வேண்டிய பணிகளை ஆய்வு செய்தனர்.

    மேலும் செஞ்சிக்கோட்டைக்கு ரோப் கார், படகு சவாரி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்து கொடுப்பது சம்பந்தமாக ஏற்கனவே வந்த மத்திய அரசு அதிகாரியிடம் மனு கொடுத்து இருப்பதாகவும் மேலும் தற்போது வரும் குழுவினரிடமும் மனு அளிக்க உள்ளதாகவும் செஞ்சி ஒன்றிய குழு தலைவர் விஜயகுமார், பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலி மஸ்தான் ஆகியோர் தெரிவித்தனர். யுனெஸ்கோ குழுவினர் ஆய்வுக்குப் பின் செஞ்சிக்கோட்டை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டால் செஞ்சிக்கோட்டை உலக அளவில் உள்ள சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் எனவும் அப்போது மேலும் வசதிகள் செய்து கொடுக்கப்படும் எனவும் இதனால் செஞ்சியின் வளர்ச்சி பெருகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

    யுனெஸ்கோ குழுவினர் வருகையையொட்டி நாளை ஒரு நாள் மட்டும் பொதுமக்கள் உட்பட அனைவரும் செஞ்சிக்கோட்டைக்குள் சென்று பார்வையிட அனுமதியில்லை.

    இத்தகவலை கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×