என் மலர்
தமிழ்நாடு

தி.மு.க. கூட்டணியில் 3 தொகுதி கேட்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி
- சமீபத்தில் திருச்சியில் நடத்தப்பட்ட விடுதலை சிறுத்தைகள் மாநாட்டின் மூலம் தன் பலத்தை திருமாவளவன் நிரூபித்து காட்டி உள்ளார்.
- தி.மு.க. கூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்டு கட்சி நாகப்பட்டினத்தை விட்டுக்கொடுக்க தயங்குகிறது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது.
முதலில் இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியுடனான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி வருகிற 30-ந்தேதி தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவுடன் பேச உள்ளது.
கடந்த தேர்தலில் விழுப்புரம், சிதம்பரம் ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இரண்டு தொகுதிகளிலும் விடுதலை சிறுத்தைகள் வெற்றி பெற்றது.
இந்த தேர்தலில் 3 தொகுதிகள் கேட்க திருமாவளவன் திட்டமிட்டுள்ளார்.
சமீபத்தில் திருச்சியில் நடத்தப்பட்ட விடுதலை சிறுத்தைகள் மாநாட்டின் மூலம் தன் பலத்தை திருமாவளவன் நிரூபித்து காட்டி உள்ளார். இந்த மாநாட்டில் திரண்டிருந்த கூட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரிலேயே பார்த்தார்.
இதை மையமாக வைத்து கூடுதல் தொகுதி கேட்கும் முடிவில் திருமாவளவன் உறுதியாக இருக்கிறார்.
நாகப்பட்டினம் அல்லது காஞ்சிபுரம் ஆகிய தொகுதிகளில் ஏதாவது ஒன்றை கேட்க முடிவு செய்துள்ளார். நாகப்பட்டினம் தற்போது கம்யூனிஸ்டு கையில் உள்ளது. காஞ்சிபுரம் தி.மு.க. கையில் இருக்கிறது.
நாகப்பட்டினம் பாராளுமன்ற தொகுதிக்குள் ஒரு சட்டமன்ற தொகுதியும், காஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதிக்குள் 2 சட்டமன்ற தொகுதிகளும் விடுதலை சிறுத்தைகள் கைவசம் உள்ளது.
தி.மு.க. கூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்டு கட்சி நாகப்பட்டினத்தை விட்டுக்கொடுக்க தயங்குகிறது. அதேபோல் காஞ்சிபுரம் தொகுதிக்கு காங்கிரஸ் குறிவைத்துள்ளது. இந்த போட்டிக்குள் திருமாவளவனும் இறங்கி இருப்பதால் காங்கிரசும், கம்யூனிஸ்டும் அதிர்ச்சி அடைந்துள்ளன.