search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தர்மபுரி வேட்பாளராக சவுமியா அன்புமணி திடீரென அறிவிக்கப்பட்டது ஏன்?
    X

    தர்மபுரி வேட்பாளராக சவுமியா அன்புமணி திடீரென அறிவிக்கப்பட்டது ஏன்?

    • சவுமியா அன்புமணி தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல் முறை.
    • கடந்த தேர்தலில் தனது கணவர் அன்புமணிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணியின் மனைவி சவுமியா அன்புமணி தர்மபுரி தொகுதியில் போட்டியிடுகிறார்.

    முதலில் வெளியான பட்டியலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிடுவதாக அரசாங்கம் என்பவரின் பெயர் அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் அவருக்கு பதிலாக சவுமியா அன்புமணி அறிவிக்கப்பட்டார்.

    சவுமியா அன்புமணி தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல் முறை. அரசியல் குடும்பத்தில் இருந்தாலும் தீவிர அரசியலில் வெளிப்படையாக இறங்கியது இல்லை. பசுமை தாயகம் அமைப்பின் தலைவராக இருந்து சுற்றுச்சூழல் ஆர்வலராகவே இருந்து வந்தார்.


    கடந்த தேர்தலில் தனது கணவர் அன்புமணிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

    சவுமியாவின் தந்தை கிருஷ்ணசாமி முன்னாள் காங்கிரஸ் தலைவர். எம்.பி.யாகவும் இருந்தவர். அதே போல் சவுமியாவின் சகோதரர் டாக்டர் விஷ்ணு பிரசாத் எம்.பி.யாக இருப்பவர். எனவே சிறு வயதில் இருந்தே அரசியல் சூழலுக்குள் வளர்ந்தவர்.

    அதே போல் மாமனார் டாக்டர் ராமதாஸ் பா.ம.க. நிறுவனராகவும், தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் தலைவராகவும் இருப்பவர். கணவர் மத்திய மந்திரியாக இருந்தவர்.


    இப்படி அரசியல் சூழ்ந்த குடும்ப சூழலுக்குள் இருக்கும் சவுமியாவும் தேர்தலில் போட்டியிட விரும்பி இருக்கிறார். மனைவி போட்டியிட விரும்பியதால் தான் போட்டியிட்ட தர்மபுரி தொகுதியில் போட்டியிட அன்புமணி ஆலோசனை வழங்கியதாக கூறப்படுகிறது.

    முக்கியமாக அ.தி.மு.க.வுடன் கூட்டணி என்றதும் 100 சதவீதம் தேர்தலில் குதிக்க தயாராகி இருக்கிறார். கடைசியில் கூட்டணி மாறியதால் போட்டியிட தயங்கியதாக கூறப்படுகிறது.

    ஒருவேளை கடைசி நேரத்தில் மனம் மாறினால் என்ன செய்வது என்ற எண்ணத்தில் தான் கட்சி மேலிடமும் பிரபலமில்லாத அரசாங்கம் என்பவரை வேட்பாளராக அறிவித்ததாகவும், எதிர் பார்த்தது போலவே சமியா போட்டியிட தயார் என்று அறிவித்ததால் அரசாங்கத்தை மாற்றி விட்டு சவுமியாவை அறிவித்ததாகவும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×