search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வெள்ளம் பாதித்த பகுதி மக்களுக்கு காய்ச்சல், நோய் தொற்றை தடுக்க எதிர்ப்பு சக்தி மாத்திரை
    X

    வெள்ளம் பாதித்த பகுதி மக்களுக்கு காய்ச்சல், நோய் தொற்றை தடுக்க எதிர்ப்பு சக்தி மாத்திரை

    • வெள்ளத்திற்கு பிறகு ஏற்படக்கூடிய பாதிப்புகளை தடுக்க மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன.
    • 3 ஆயிரம் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன.

    சென்னை:

    'மிச்சாங்' புயல் தாக்கத்தால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மழை வெள்ளம் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது.

    வெள்ளம் பாதித்த பகுதிகளில் தண்ணீர் வடிந்து விட்டதால் காய்ச்சல் மற்றும் தொற்று நோய் பரவாமல் தடுக்க தமிழக சுகாதாரத்துறை முன்எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.

    வெள்ளம் மற்றும் வெள்ளத்திற்கு பிறகு ஏற்படக்கூடிய பாதிப்புகளை தடுக்க மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. காயம் அடைந்தவர்களுக்கு 'டெட்டனஸ் டாக்சாய்டு' செலுத்தப்படுகிறது. மேலும் மேல்நிலை தொட்டிகள், சம்புகளில் பிளீச்சிங் பவுடர் தெளிப்பதற்கு சுகாதாரத்துறை மூலம் பிளீச்சிங் பவுடர் வழங்கப்படுகிறது.

    வயிற்றுப்போக்கு, காய்ச்சல் போன்ற மழை நீர் மற்றும் நோய் கிருமிகளால் பரவும் தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்க அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது.


    பொதுமக்கள் இந்த சமயத்தில் பாதுகாப்பான குடிநீரை மட்டுமே குடிக்க வேண்டும். கொதிக்க வைத்த தண்ணீரை குடிப்பது நல்லது. தொற்று நோய்களை தடுக்க சோப்பு மற்றும் தண்ணீரில் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும்.

    வெள்ளத்தில் நனைந்த உணவு பொருட்களை பயன்படுத்தக் கூடாது. யாருக்காவது காய்ச்சல் அல்லது வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ முகாம் உள்ளிட்ட அரசு சுகாதார நிலையங்களில் மருத்துவ சிகிச்சை பெற வேண்டும். வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம். தனியார் டேங்கர் லாரி, திறந்த வெளி குளங்கள், கிணறுகளில் வெள்ள நீர் கலந்து இருக்க வாய்ப்பு இருப்பதால் அவற்றை குடிப்பது பாதுகாப்பானது அல்ல.

    சரியான அளவு குளோரின் உள்ள தண்ணீரை குடிப்பதற்கு பயன்படுத்த வேண்டும். குப்பை மற்றும் அழுகும் பொருட்களில் ஈக்கள் பெருகும். எனவே கழிவுகளை உடனே அகற்ற வேண்டும். இறந்த விலங்குகள் அல்லது பறவைகளை பாதுகாப்பாக அகற்ற வேண்டும்.

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் 9 மாதம் முதல் 15 வயது உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் முந்தைய நோய் தடுப்பு நிலையை பொருட்படுத்தாமல் தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசியை ஒரு டோஸ் கொடுக்க வேண்டும். இது குறித்து பொதுசுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் கூறியதாவது:-

    வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் இன்று 3 ஆயிரம் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. எலி காய்ச்சல், காலரா மற்றும் பிற தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க மக்கள் காய்ச்சிய நீரை குடிக்க வேண்டும். "டாக்னிகள்" என்ற நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரையை சாப்பிட்டால் காய்ச்சல், தொற்று நோயில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம். அனைத்து மருத்துவ முகாம்கள், சுகாதார நிலையங்களில் இந்த மாத்திரை வழங்கப்படுகிறது. பொது மக்கள் சுகாதாரத்துறையின் அறிவுரைகளை பின்பற்றினால் நோய் தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×