search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கஞ்சா வியாபாரிகள் 2,264 பேரின் ரூ.50 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்- தமிழக அரசு அதிரடி
    X

    தமிழக அரசு

    கஞ்சா வியாபாரிகள் 2,264 பேரின் ரூ.50 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்- தமிழக அரசு அதிரடி

    • கஞ்சா வியாபாரிகளின் 2,264 வங்கி கணக்குகள் மட்டுமின்றி அவர்களின் ரூ.50 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.
    • 460 கஞ்சா வியாபாரிகள் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டு 1006 இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    சென்னை:

    தமிழகத்தில் கஞ்சா, ஹெராயின், கொகைன் போன்ற போதை பொருட்களின் நடமாட்டத்தை தடுக்கும் வகையில் அரசு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது.

    'ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0' என்ற பெயரில் கடந்த மார்ச் மாதம் சோதனை திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    இதில் மதுரையை சேர்ந்தவர்களான காளை அவரது மனைவி பெருமாயி, அவரது உறவினர் அய்யர் ஆகியோர் தொடர்ந்து கஞ்சா கடத்தல் விற்பனையில் ஈடுபட்டு வந்தனர்.

    அவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு சொந்தமான 8 வீட்டுமனைகள், பல ஏக்கர் மதிப்பிலான விவசாய நிலங்கள் என ரூ.5.5 கோடி மதிப்பிலான சொத்துகள், வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.

    தென் மண்டல ஐ.ஜி. அஸ்ராசார்க் பொறுப்பேற்ற பின் மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் 651 பேரின் சொத்துக்கள் முடக்கப்பட்டு உள்ளன. அதேபோல 159 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

    அவர்களின் ரூ.11 கோடிக்கு மேலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. கடந்த 6 மாதங்களில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதுதொடர்பாக தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 7 நாட்களில் 232 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 332 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் பயன்படுத்திய 34 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சா மொத்த வியாபாரிகளின் சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டது.

    இதுவரை கஞ்சா வியாபாரிகளின் 2,264 வங்கி கணக்குகள் மட்டுமின்றி அவர்களின் ரூ.50 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. 460 கஞ்சா வியாபாரிகள் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டு 1006 இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும், மாநகர காவல் ஆணையாளர்களும், கஞ்சா பதுக்கல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ள மொத்த வியாபாரிகளின் வங்கி கணக்குகளையும், சட்ட விரோதமாக வாங்கி குவித்த சொத்துக்களையும் முடக்கி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

    இனிவரும் காலங்களில் தமிழ்நாட்டில் கஞ்சா கடத்துவோர், பதுக்குவோர், விற்போர் இந்த குற்றத்தின் மூலம் சம்பாதிக்கும் அனைத்து சொத்துக்களும் முடக்கப்படும் என்று எச்சரிக்கப்படுகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×