search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னை மக்களை இருமலில் ஆழ்த்திய 2 வகை வைரஸ்கள்
    X

    சென்னை மக்களை இருமலில் ஆழ்த்திய 2 வகை வைரஸ்கள்

    • எந்த வகையான வைரஸ் சமூகத்தில் பரவி வருகிறது என்பது குறித்த ஆய்வை பொது சுகாதாரத்துறை முன்னெடுத்தது.
    • பரிசோதனை முடிவில் தற்போது கொரோனா பாதிப்போ அல்லது பன்றிக்காய்ச்சல் பாதிப்போ பரவலாக இல்லை என்பது கண்டறியப்பட்டது.

    சென்னை:

    சென்னையில் சமீப காலமாக பரவிவரும் காய்ச்சல் இன்புளூயன்சா-ஏ வகை வைரஸ் தொற்று என்பது பொது சுகாதாரத்துறையின் ஆய்வு முடிவுகளில் தெரிய வந்துள்ளது.

    அதற்கு அடுத்தபடியாக நுரையீரலில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆர்.எஸ்.வி. வைரஸ் தொற்று பரவலாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விரு வைரஸ் தொற்றுகளும் பருவ காலத்தில் வழக்கமாக பரவும் பாதிப்புதான் என்ப தால் அச்சமடையத் தேவையில்லை என்றும், அதே வேளையில் முன் எச்சரிக்கையாக இருக்குமாறும் பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    குளிர்காலம் மற்றும் பருவமழைக்காலம் நிறைவடைந்தபோதிலும் சென்னையிலும், அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக உடல் வலி, தொண்டை வலி, இருமல், சளியுடன் கூடிய காய்ச்சல் முதியவர்களிடையேயும், குழந்தைகளிடையேயும் தீவிரமாக பரவி வருகிறது.

    இந்த நிலையில், எந்த வகையான வைரஸ் சமூகத்தில் பரவி வருகிறது என்பது குறித்த ஆய்வை பொது சுகாதாரத்துறை முன்னெடுத்தது. மாதிரிகளை தோராயமாக பாதிக்கப்பட்டவர்களின் சளியை சேகரித்து மொத்தம் 21 வகையான வைரஸ் பாதிப்புகள் அதில் உள்ளனவா என பகுப்பாய்வு செய்யப்பட்டது. பொது சுகாதாரத்துறை ஆய்வகத்தில் நடைபெற்ற இந்த பரிசோதனைக்காக சிறப்பு உபகரணங்கள் தருவிக்கப்பட்டன.

    பரிசோதனை முடிவில் தற்போது கொரோனா பாதிப்போ அல்லது பன்றிக்காய்ச்சல் பாதிப்போ பரவலாக இல்லை என்பது கண்டறியப்பட்டது. அதேவேளையில் இன்புளூயன்சா ஏ வகை தொற்று 50 சதவீதம் பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    அதற்கு அடுத்தபடியாக ஆர்.எஸ்.வி. எனப்படும் நுரையீரல் வைரஸ் தாக்க பாதிப்பு 37.5 சதவீதம் பேருக்கு இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

    இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம் கூறியதாவது:-

    தற்போது சென்னையில் பரவி வரும் வைரஸ் பாதிப்புகள் புதியவை அல்ல. எனவே, அவை ஒரு வாரத்துக்குள் குணமடைந்து விடக்கூடியவைதான். அதேவேளையில் முதியவர்கள், இணைநோய் உள்ளவர்கள், நோய் எதிர்ப்பாற்றல் குறைந்தவர்களுக்கு தேவைப்பட்டால் ஓசல்டா மிவிர் எனப்படும் வைரஸ் எதிர்ப்பு மருந்து வழங்கலாம்.

    அந்த மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் போதிய அளவு கையிருப்பு உள்ளன. அடுத்த சில நாட்களுக்குள் வைரஸ் பாதிப்பு கட்டுப்பாட்டுக்குள் வரும். முதியவர்கள், எதிர்ப்பாற்றல் குறைந்தவர்கள் பொது இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். அப்படி சென்றாலும் முகக்கவசம் அணிவது நல்லது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×