search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    முழு கொள்ளளவை நெருங்கும் உடுமலை அமராவதி அணை: விவசாயிகள் மகிழ்ச்சி
    X

    முழு கொள்ளளவை நெருங்கும் உடுமலை அமராவதி அணை: விவசாயிகள் மகிழ்ச்சி

    • நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழை காரணமாக அணையின் பிரதான நீர்வரத்தான பாம்பாற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது.
    • அணையின் முழு கொள்ளளவான 90 அடியை நெருங்கியுள்ளதால் அணையின் பாதுகாப்பு கருதி பொதுப்பணித்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்குதொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்ற நீராதாரங்களை ஆதாரமாக கொண்டு அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது. தமிழகம் மற்றும் கேரளா மாநில வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற சின்னாறு, தேனாறு, பாம்பாறு மற்றும் துணை ஆறுகள் மழைக்காலங்களில் அணைக்கு நீர்வரத்தை அளித்து வருகிறது. இதனை ஆதாரமாகக்கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழை காரணமாக அணையின் பிரதான நீர்வரத்தான பாம்பாற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. இதையடுத்து அணைக்கு வந்து கொண்டுள்ள தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரித்து 10 ஆயிரம் கன அடியை கடந்தது. இதனால் அணையின் நீர் இருப்பு கிடுகிடுவென உயர்ந்து தற்போது 86 அடியை எட்டியுள்ளது. அணையின் முழு கொள்ளளவான 90 அடியை நெருங்கியுள்ளதால் அணையின் பாதுகாப்பு கருதி பொதுப்பணித்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர்.

    கனமழை பெய்வதற்கான சூழலும் நிலவியதால் அணைக்கு ஏற்பட்டுள்ள நீர்வரத்தை பொதுப்பணித்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்தநிலையில் நேற்று முதல் மலைப்பகுதியில் மழை குறைந்ததால் அணைக்கு வரும் நீர்வரத்து சற்று குறைந்துள்ளது.

    இருப்பினும் அணை அதன் முழுகொள்ளளவை நெருங்கும் பட்சத்தில் அமராவதி ஆற்றில் உபரிநீர் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் ஆற்றின் கரையோரத்தில் உள்ள கிராமங்களில் பதற்றம் நிலவி வருகிறது.

    இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சரியாக பெய்யவில்லை. அதேபோல் வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யாமல் இருந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் உயரவில்லை. தற்போது பெய்த மழையில் அணை முழு கொள்ளளவை நெருங்கியுள்ளதால் உடுமலை பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    Next Story
    ×