search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய பணம் கொடுத்தவர்கள் யார்-யார்?
    X

    ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய பணம் கொடுத்தவர்கள் யார்-யார்?

    • ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளுக்கு பின்னணியில் இருந்து பலர் பண உதவிகளை செய்துள்ளனர்.
    • போலீஸ் காவலில் உள்ள 4 பேரிடமும் தீவிரமாக விசாரணை மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

    சென்னை:

    பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ந்தேதி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    கடந்த ஆண்டு சென்னை பட்டினப்பாக்கத்தில் கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி ஆற்காடு சுரேசின் கொலைக்கு பழிக்குபழி வாங்கவே ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக அவரது தம்பி பொன்னை பாலு, குன்றத்தூர் திருவேங்கடம் உள்பட 11 பேர் முதலில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டார்கள்.

    இதன் பின்னர் தொடர்ச்சியாக ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடைய குற்றவாளிகள் சிக்கி வருகிறார்கள். இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் திருவேங்கடம் மட்டும் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

    ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு ஆற்காடு சுரேசின் படுகொலை மட்டுமே காரணம் இல்லை என்பதும், மேலும் 3 ரவுடிக் கும்பலை சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீஸ் விசாரணை வேகப்படுத்தப்பட்டு கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக ஆற்காடு சுரேசின் தம்பி பொன்னை பாலு, வக்கீல் அருள், ராமு மற்றும் த.மா.கா.வைச் சேர்ந்த வக்கீல் ஹரிகரன் ஆகிய 4 பேரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


    ஹரிகரனிடம் 5 நாள் போலீஸ் காவலிலும், மற்றவர்களிடம் 3 நாள் காவலிலும் விசாரணை மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

    ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளுக்கு பின்னணியில் இருந்து பலர் பண உதவிகளை செய்துள்ளனர். தங்களால் நேரடியாக களம் இறங்க முடியாத நிலையில் பண உதவி, வாகன உதவி போன்றவற்றை செய்தவர்கள் யார்? யார்? என்பது பற்றிய விசாரணை போலீஸ் காவலில் உள்ள 4 பேரிடமும் தீவிரமாக மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

    வக்கீல் அருளின் வங்கி கணக்குக்கு ரூ.50 லட்சம் பணம் செலுத்தப்பட்டதாகவும், பாஜகவில் இருந்த பெண் தாதா அஞ்சலை ரூ.10 லட்சம் பணம் கொடுத்ததாகவும் ஏற்கனவே பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு ரூ.1 கோடி வரை பணப்பட்டு வாடா நடைபெற்று இருப்பதாகவும் திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வதற்கு வேலூர் சிறையில் உள்ள வியாசர்பாடியை சேர்ந்த ஆயுள் கைதியும் திட்டம் தீட்டி கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இதனால் அவரது வழியில் பணப்பட்டுவாடா ஏதும் செய்யப்பட்டதா? என்பது பற்றியும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். ஆற்காடு சுரேசின் கொலைக்கு பழிக்குப்பழி வாங்க தாம்பரத்தை சேர்ந்த ரவுடி ஒருவரும் பழிக்குபழி வாங்குவதற்கு சபதம் எடுத்து திட்டம் போட்டுள்ளான். அவனது சார்பில் இருந்தும் ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளுக்கு பணப்பட்டுவாடா நடைபெற்றதா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பான பட்டியல் தயாராகி வருகிறது.

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பல்வேறு வழிகளில் நடைபெற்ற பணப்பட்டுவாடா? பற்றியும் பின்னணியில் இருந்து இயக்கியவர்கள் குறித்தும் பொன்னையா பாலு உள்பட 4 பேரிடமும் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதன் முடிவில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×