search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வங்கி கிளையில் துணிகர மோசடி: ஆள்மாறாட்டம் மூலமாக ரூ.10 லட்சம் கடன் வாங்க முயன்ற டிரைவர் கைது
    X

    வங்கி கிளையில் துணிகர மோசடி: ஆள்மாறாட்டம் மூலமாக ரூ.10 லட்சம் கடன் வாங்க முயன்ற டிரைவர் கைது

    • புதிதாக பாஸ்புக் வேண்டும் என தனது புகைப்படத்தை கொடுத்து ஏழுமலையின் பெயரில் புதிய பாஸ்புக்கை வாங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
    • அதிர்ச்சி அடைந்த ஏழுமலை மீண்டும் வங்கிக்கு சென்று வங்கி அதிகாரிகளிடம் முறையிட்டார்.

    சென்னை:

    சென்னை எம்.ஜி.ஆர். நகர் சத்யா நகரில் வசித்து வருபவர் ஏழுமலை. இவர் மாநகரப் பேருந்து பஸ் கண்டக்டராக கே.கே. நகர் பணிமனையில் பணிபுரிந்து வருகிறார்.

    இவர் கடந்த மாதம் 24- ந் தேதி அசோக் நகர் பகுதியில் இருந்து கே.கே. நகர் பணிமனைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அந்த வழியாக அதே பணிமனையில் டிரைவராக பணிபுரிந்து வரும் அலெக்சாண்டர் ராஜா என்பவர் ஏழுமலையின் இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு ஏறி உள்ளார். அப்போது கே.கே. நகர் பணிமனையின் அருகில் ஏழுமலையின் இருசக்கர வாகனம் விபத்துக்கு உள்ளானது.

    ஏழுமலைக்கு அசோக் நகரில் உள்ள இந்தியன் வங்கியில் சேமிப்பு கணக்கு உள்ளது. கடந்த 13-ந் தேதி வங்கி கணக்கில் இருந்து 800 ரூபாய் எடுக்கப்பட்டது. அதற்கான குறுஞ்செய்தி தனது செல்போனுக்கு வந்ததால் அதிர்ச்சி அடைந்த ஏழுமலை அசோக் நகரில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் விசாரித்தார்.

    அப்போது வேறு ஒரு நபர் ஆதார் எண் மற்றும் ஏ.டி.எம். கார்டை காண்பித்து தனது பாஸ்புக் காணவில்லை என்றும் இதனால் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்து 800 ரூபாயை எடுத்து கொண்டு சென்றது தெரிய வந்தது. ஏழுமலையின் கை யெழுத்தை அலெக்சாண்டர் ராஜாவே போலியாக போட்டு பணம் கேட்டு உள்ளார். கையெழுத்தில் சந்தேகம் ஏற்படவே வங்கி அதிகாரிகள் அவரை விசாரித்துள்ளனர். நீண்ட காலமாக தனது கையெழுத்து மாறி உள்ளதாகவும் தற்போது தான் நேரடியாக வங்கிக்கு வந்து பணம் எடுப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.

    இதனால் சந்தேகம் அடைந்த ஏழுமலை சம்பந்தப்பட்ட நபரின் புகைப்படம் மற்றும் ஆவணங்கள் வங்கி அதிகாரிகளிடம் கேட்டார். அப்போதுதான் டிரைவர் அலெக்சாண்டர் ராஜா தனது பெயரில் போலியாக ஆதார் அட்டையில் புகைப் படத்தை மார்பிங் செய்து வங்கியில் கொடுத்ததும் அதேபோல் தனக்கு பாஸ்புக் இல்லை என்றும் புதிதாக பாஸ்புக் வேண்டும் என தனது புகைப்படத்தை கொடுத்து ஏழுமலையின் பெயரில் புதிய பாஸ்புக்கை வாங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    அதுமட்டுமின்றி ஏழுமலையின் வங்கிக் கணக்கில் இருந்து 10 லட்ச ரூபாய் தனக்கு கடன் வேண்டுமென இந்தியன் வங்கிக் கிளையில் கேட்டு அதற்கான விண்ணப்பத்தையும் பூர்த்தி செய்து கொடுத்து உள்ளார்.

    நேற்று மீண்டும் ஏழுமலைக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் இந்தியன் வங்கி மூலம் பத்து லட்ச ரூபாய் கடன் பெற்றுக் கொள்ளலாம் என வந்து உள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஏழுமலை மீண்டும் வங்கிக்கு சென்று வங்கி அதிகாரிகளிடம் முறையிட்டார்.

    அதன் பிறகு ஏழுமலை நண்பர்களுடன் சேர்ந்து கையும் களவுமாக வங்கிக்கு வந்த அலெக்சாண்டர் ராஜாவை பிடித்தனர். காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    லிப்ட் கேட்டபோது கீழே விழுந்த ஏழுமலையின் மணிபர்சில் இருந்து ஆவணங்களை எடுத்து அலெக்சாண்டர் ராஜா கைவரிசை காட்டி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    Next Story
    ×