search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    விக்கிரவாண்டி இடைத்தேர்தல்- நாம் தமிழர் கட்சிக்கு முன்னோட்டமாக அமையும் சீமான்
    X

    விக்கிரவாண்டி இடைத்தேர்தல்- நாம் தமிழர் கட்சிக்கு முன்னோட்டமாக அமையும் சீமான்

    • நாட்டில் நடப்பது தவறு என்று தெரிந்தும் கூட்டணி கட்சியினர் துணை போய் வருகின்றனர்.
    • மத்திய அரசின் திட்டங்கள் எதிலும் தமிழ் இல்லை.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் டாக்டர் அபிநயாவை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு பிரசாரம் மேற்கொண்டார்.

    தமிழகத்தையும், தமிழர்களையும் காப்பாற்றுவதற்காக நாம் தமிழர் கட்சி சமரசம் இல்லாமல் கடந்த 13 ஆண்டுகளாக எவ்வித அரசியல் பின் புலமும் இல்லாமல் போராடி வருகிறது. நாட்டில் நடப்பது தவறு என்று தெரிந்தும் கூட்டணி கட்சியினர் துணை போய் வருகின்றனர். தேர்தல் களத்தை வைத்து தெளிவு பெற வேண்டும். இந்தியம் என்பது இந்தியை திணிக்கும், திராவிடம் அதை ஆதரிக்கும். அதனால் நாம் தமிழர் தமிழ் தேசியம் பேசுகிறது.

    தற்போது எந்த இடத்திலும் தமிழ் இல்லை. திராவிடம் தமிழர்களை பிரிக்கும். தமிழர்கள் ஒன்றுபட்டால் திராவிடம் இருக்காது. மத்திய அரசின் திட்டங்கள் எதிலும் தமிழ் இல்லை. இதை கேட்கும் தைரியம் திராவிடத்துக்கு இருக்கிறதா என்பதை மக்கள் அறிய வேண்டும். தமிழ் தேசியத்துக்கும், திராவிடத்துக்கும் பல்வேறு கருத்தியல் முரண்பாடு உள்ளது. தமிழ்மொழி, பாராளுமன்ற கட்டிடத்தில் இல்லை. அது குறித்தும் தி.மு.க. பேசவில்லை. திராவிடம், தேர்தலின் போது பணத்தை முன்நிறுத்தும். ஆனால் தமிழ் தேசியம் மானத்தையும், தன்மானத்தையும் முன்னிறுத்தும்.

    சமூகநீதி குறித்து பேசும் தி.மு.க. மாநில உரிமைகளையெல்லாம் விட்டுக்கொடுத்து விட்டனர். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாதது ஏன்? நாங்கள் கேட்பது இடஒதுக்கீடு அல்ல, இடபங்கீடு தான் கேட்கிறோம். இதை மாநில அரசு செய்யலாம் என உரிமை உள்ளபோது, மத்திய அரசிடம் இந்த உரிமையை திராவிடம் அடமானம் வைக்கிறது. அரசியல் மாற்றம் இலவசங்களை அளித்து மக்களை அடிமையாக்கி வைத்துள்ள தி.மு.க.வுக்கு முடிவு கட்ட வேண்டும்.

    நடைபெற உள்ள இந்த இடைத்தேர்தலால் நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படபோவதில்லை. ஆனால் இத்தேர்தல் நாம் தமிழர் கட்சிக்கு ஒரு முன்னோட்டமாக அமையும். எனவே தமிழகத்தில் அரசியல் மாற்றம் நிகழ மக்கள், இத்தேர்தலை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×