search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வத்தை இணைக்க முடியுமா?- சசிகலாவின் திட்டம்தான் என்ன?
    X

    எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வத்தை இணைக்க முடியுமா?- சசிகலாவின் திட்டம்தான் என்ன?

    • அரசியல் களத்தில் சசிகலா போடும் திட்டம் என்ன? என்பது புரியாத புதிராகவும் மர்மமாகவுமே உள்ளது.
    • கடந்த சில மாதங்களாகவே அரசியல் களத்தில் அ.தி.மு.க.வை ஒன்றிணைப்பேன் என்று சசிகலா கூறிக் கொண்டிருக்கிறார்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் என கூறிக்கொண்டு அறிக்கைகள் வெளியிட்டு வரும் சசிகலா, திடீர் திடீரென சுற்றுப்பயணத்தையும் மேற்கொள்கிறார்.

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இருப்பினும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரிலேயே அவரும் செயல்பட்டு வருகிறார். டி.டி.வி. தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் தனிக்கட்சி நடத்தி வருகிறார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. இப்படி 4 பிரிவுகளாக செயல்பட்டு வருகிறது.

    இதற்கிடையே சசிகலா பேட்டி அளிக்கும் போதெல்லாம் அ.தி.மு.க.வை ஒன்று சேர்க்கும் முயற்சியில் நான் ஈடுபட்டு வருகிறேன். என்னால் மட்டுமே அது முடியும் என்று திரும்ப திரும்ப கூறி வருகிறார்.

    எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தலைமை பதவிக்கான போட்டி காரணமாகவே பிரிந்துள்ளனர். இருவரும் மீண்டும் இணைய வாய்ப்பு உள்ளதா? என்று அ.தி.மு.க.வினரிடம் கேட்டால் "ஒரே உறையில் 2 கத்திகள் இருக்க முடியுமா?" என அவர்கள் எதிர்கேள்வி கேட்கிறார்கள். இதன் மூலம் யாராவது விட்டுக் கொடுத்தால் மட்டுமே இணைப்பு சாத்தியம் என்பது தெள்ளத் தெளிவாகி உள்ளது.

    ஆனால் சசிகலாவோ நேற்று அளித்த பேட்டியில் 2 பேரையும் சந்திக்க முடிவு செய்திருப்பது போல கருத்துக்களை தெரிவித்துள்ளார். எனது கட்சியினரை எப்போது வேண்டுமானாலும் நான் சந்திப்பேன் என்று அவர் கூறியுள்ளார். இதற்கு அ.தி.மு.க. சார்பில் பதிலடி கொடுக்கப்பட்டு உள்ளது.

    "அ.தி.மு.க. விவகாரத்தில் சசிகலா மூக்கை நுழைக்க வேண்டாம்" என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    அ.தி.மு.க.வை இணைப்பேன், இணைப்பேன் என்று திரும்ப திரும்ப கூறி சசிகலா பிலிம் காட்டிக்கொண்டிருப்பதாக அ.தி.மு.க.வினர் கூறியுள்ளனர். இது தொடர்பாக அ.தி.மு.க. நிர்வாகி ஒருவர் கூறும்போது, எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. செயல்பட்டு வருகிறது. அவரது தலைமையை ஏற்று பிரிந்து சென்றவர்கள் இணையலாம். ஆனால் சசிகலாவுக்கு இடமில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

    இதனால் அரசியல் களத்தில் சசிகலா போடும் திட்டம் என்ன? என்பது புரியாத புதிராகவும் மர்மமாகவுமே உள்ளது. அவரது பின்னால் அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் யாருமே இல்லாத நிலையில் அவர் எதை நோக்கி பயணிக்கிறார் என்றும் அ.தி.மு.க.வினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    சசிகலா சிறையில் இருந்து வெளியானபோது முதலில் அரசியலில் தீவிரமாக ஈடுபடுவேன் என்றார். பின்னர் ஒதுங்கி இருக்கப்போவதாக பின் வாங்கினார். கடந்த சில மாதங்களாகவே அரசியல் களத்தில் அ.தி.மு.க.வை ஒன்றிணைப்பேன் என்று கூறிக் கொண்டிருக்கிறார். இப்படி மாற்றி மாற்றி அவர் பேசியுள்ளதால் சசிகலாவின் எதிர்கால திட்டம்தான் என்ன? என்பதும் குழப்பமாகவே மாறி இருக்கிறது என்றும் அ.தி.மு.க.வினர் விமர்சித்துள்ளனர்.

    Next Story
    ×