search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னையில் அண்ணாமலை பாதயாத்திரைக்கு போலீஸ் அனுமதி கிடைக்குமா? அதிகாரிகள் ஆலோசனை
    X

    சென்னையில் அண்ணாமலை பாதயாத்திரைக்கு போலீஸ் அனுமதி கிடைக்குமா? அதிகாரிகள் ஆலோசனை

    • 200-வது தொகுதியாக சென்னையில் வருகிற 11-ந் தேதி நடைபயணம் மேற்கொள்ள அண்ணாமலை முடிவு செய்துள்ளார்.
    • அண்ணாமலையின் இந்த நடைபயணத்துக்கு போலீசார் இதுவரை அனுமதி வழங்கவில்லை.

    சென்னை:

    பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கடந்த ஆண்டு ஜூலை மாதம் ராமேசு வரத்தில் நடைபயணத்தை தொடங்கினார். தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பாத யாத்திரையாக சென்று மக்களை சந்தித்து வரும் அண்ணாமலை சட்டமன்ற தொகுதி வாரியாக தனது நடைபயணத்தை திட்டமிட்டு உள்ளார். இதன்படி 200-வது தொகுதியாக சென்னையில் வருகிற 11-ந் தேதி நடைபயணம் மேற்கொள்ள அண்ணாமலை முடிவு செய்துள்ளார்.

    திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் நடைபயணம் மேற்கொள்ள அவர் திட்டமிட்டுள்ளார். இதற்காக அனுமதி கேட்டு சென்னை மாநகர போலீசில் முறைப்படி கடிதம் கொடுக்கப்பட்டு உள்ளது.

    அண்ணாமலையின் இந்த நடைபயணத்துக்கு போலீசார் இதுவரை அனுமதி வழங்கவில்லை. இதனால் நடைபயணத்துக்கு அனுமதி கிடைக்குமா? என்கிற கேள்வி எழுந்து உள்ளது.

    இது தொடர்பாக போலீசாரிடம் கேட்டபோது, நடை பயணம், ஊர்வலம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தும் போது அதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுமா? என்பது பற்றி ஆராய்ந்தே முடிவு செய்வோம். இது தொடர்பாக சட்டம்-ஒழுங்கு, போக்குவரத்து போலீசாரின் கருத்துக்களை கேட்டுள்ளோம். அதன் பிறகே நடைபயணத்துக்கு அனுமதி அளிக்கலாமா? என்பது பற்றி உயர் போலீஸ் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றனர்.

    இதற்கிடையே பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவரான ஜெ.பி.நட்டா, பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கும் பாரதிய ஜனதா கட்சியினர் 11-ந் தேதி மாலையில் ஏற்பாடு செய்துள்ளனர்.

    இந்த பொதுக்கூட்டத்தை நடத்துவதற்கு மடிப்பாக்கம், தி.நகர், கீழ்ப்பாக்கம், செயின்ட் ஜார்ஜ் மேல் நிலைப்பள்ளி ஆகிய 3 இடங்கள் தேர்வு செய்யப்பட் டிருந்தன. இவற்றில் ஏதா வது ஒரு இடத்தில் பொதுக் கூட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்திருந்த பாரதிய ஜனதா கட்சியினர் தற்போது செயின்ட் ஜார்ஜ் பள்ளியில் பொதுக்கூட் டத்தை நடத்துவது என்று முடிவு செய்துள்ளனர்.

    அண்ணாமலையின் நடைபயணத்தை காலையில் நடத்திவிட்டு பொதுக்கூட்டத்தை மாலையில் நடத்த முடிவு செய்துள்ள பாரதிய ஜனதா கட்சியினர் பொதுக் கூட்டத்தில் லட்சக்கணக்கானோரை திரட்ட திட்டமிட்டுள்ளனர்.

    Next Story
    ×