என் மலர்
தமிழ்நாடு
சமூக ஆர்வலர் கொலை எதிரொலி: திருமயம் கல் குவாரிகளில் 2-வது நாளாக அதிரடி சோதனை
- கல் குவாரி உரிமையாளர் ராமையாவை வலை வீசி தேடி வருகின்றனர்
- கரூரிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ள டிரோன் கேமரா மூலம் அளவீடும், வீடியோ பதிவும் மேற்கொள்ளப்பட்டது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே வெங்களூரைச் சேர்ந்தவர் ஜகபர் அலி (வயது 58) அதிமுக பிரமுகரும், சமூக ஆர்வலருமான இவர் திருமயம் அருகே துளையானூரில் இயங்கி வரும் கல்குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட சட்டவிரோதமாக கனிமங்கள் தோண்டி எடுக்கப்படுவதாக புகார் தெரிவித்து போராட்டம் நடத்தி வந்தார்.
மேலும் மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மாவட்ட நிர்வாகத்திடமும் அவ்வப்போது புகார் அளித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி ஜகபர் அலியை லாரி ஏற்றி திட்டமிட்டு கொலை செய்தனர். இது தொடர்பாக லாரி ஏற்றி கொலை செய்த திருமயம் பகுதியை சேர்ந்த மினி லாரி உரிமையாளர் முருகானந்தம்(56), அதற்கு உறுதுணையாக பின் தொடர்ந்து வழிகாட்டிய ராமநாதபுரத்தைச் சேர்ந்த அவரது லாரி டிரைவர் காசிநாதன், கொலைக்கு மூளையாக இருந்து செயல்பட்டதாக கூறப்படும் திருமயம் அருகே பாப்பாத்தி ஊரணியைச் சேர்ந்த கல்குவாரி அதிபர் ராசு(54)அவரது மகன் தினேஷ் (28 )ஆகிய 4 பேரை திருமயம் போலீசார் கைது செய்தனர்.
மேலும் இந்த கொலையில் தலைமறைவாக இருக்கும் மற்றொரு கல் குவாரி உரிமையாளர் ராமையாவை வலைவீசி தேடி வருகின்றனர்
கல்குவாரி முறைகேடு தொடர்பாக ஜகபர் அலி தான்கொல்லப்படுவதற்கு முன்பு பேசிய வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
இதற்கிடையே ஜகபர் அலியால் குற்றம் சாட்டப்பட்ட ராசு மற்றும் ராமையா ஆகியோரின் கல்குவாரிகளில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்
இந்த ஆய்வில் திருச்சி புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநா் ஜெயஷீலா, புதுக்கோட்டை உதவி இயக்குநா் லலிதா, நாகை உதவி இயக்குநா் சுரதா உள்ளிட்ட கரூா், பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களைச் சோ்ந்த புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநா்கள், புவியியலாளா்கள் 12 பேர் கொண்ட குழுவினா் ஈடுபட்டனா்.
இதில் எந்த அளவுக்கு கற்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து கரூரிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ள டிரோன் கேமரா மூலம் அளவீடும், வீடியோ பதிவும் மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பணிகள் இன்று 2-வது நாளாக காலையில் இருந்து தொடங்கி நடைபெற்று வருகிறது.
இது குறித்து அதிகாரிகள் கூறும்போது,
புகாருக்கு ஆளாகியுள்ள ராசு, ராமையா ஆகியோர் நடத்தும் கல்குவாரி மற்றும் கிரஷர்களின் அனுமதி ஒப்பந்த காலம் 2023-ம் ஆண்டிலேயே முடிந்து விட்டது.
இருப்பினும் சட்ட விரோதமாக கற்களை வெட்டி எடுத்துள்ளதாக ஏற்கனவே ராமையாவுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ரூ.6.70 கோடி அபராதமும், ராசுவுக்கு ரூ.12 கோடி வரை அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஆய்வு செய்யப்பட்டதில் அளவுக்கு அதிகமான கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டதும் முதல் கட்டமாக தெரிய வந்துள்ளது.
அளவீடும் பணிகள் மேலும் 3 நாட்கள் நடைபெற உள்ளது. அளவிடும் பணி முடிந்ததும் அதற்கான அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்றனர்.
இதற்கிடையே குற்றம் சாட்டப்பட்ட கடந்த சில ஆண்டுகளில் மட்டும் கல்குவாரி மற்றும் கிரசர்களில் பல கோடி கனிம வளம் முறைகேடு நடந்துள்ளது திட்டவட்டமாக தெரிய வந்துள்ளது. மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுபோன்று உரிமங்களை புதுப்பிக்காமல் இயங்குவதாக புகார் எழுந்துள்ளது.
இதற்கிடையே சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொலை செய்யப்பட்டதை கண்டித்து எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு பொறுப்பாளர் உதயகுமார் கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றினார். இதேபோன்று தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.