search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கூட்டுறவு சங்கத்தில் தகுதியற்ற 44 லட்சம் உறுப்பினர்கள் அதிரடி நீக்கம்
    X

    கூட்டுறவு சங்கத்தில் தகுதியற்ற 44 லட்சம் உறுப்பினர்கள் அதிரடி நீக்கம்

    • கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்த தி.மு.க. அரசு திட்டமிட்டுள்ளது.
    • மாநிலம் முழுவதும் 34,600 ரேசன் கடைகளை கூட்டுறவு சங்கங்கள் நடத்தி வருகின்றன.

    சென்னை:

    தேசிய கூட்டுறவு தர தகவலின்படி தமிழகத்தில் கிட்டத்தட்ட 22,110 மாநில அளவிலான சங்கங்கள் மற்றும் 140 பல மாநில சங்கங்கள் உள்ளன.

    கடந்த ஆண்டு பிப்ரவரியில் மாநில கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் ஆணையம் வெளியிட்ட சுற்றறிக்கையில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 2.23 கோடியாக இருந்தது.

    இதற்கிடையே கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்த தி.மு.க. அரசு திட்டமிட்டுள்ளது. இதையொட்டி அதிகாரிகள் உறுப்பினர்கள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டனர்.

    இறந்தவர்கள் மற்றும் மீண்டும் உறுப்பினர்களாக இருக்க தகுதியற்றவர்கள் தொடர்பாக நீக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

    அதன்படி கூட்டுறவு சங்கங்களின் பட்டியலில் இருந்து கிட்டத்தட்ட 44 லட்சம் தகுதியற்ற உறுப்பினர்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

    தஞ்சை மாவட்டத்தில் தான் அதிக பட்சமாக 3.23 லட்சம் தகுதியற்ற உறுப்பினர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தப்படியாக மதுரை (2.52 லட்சம்), சேலம் (2.09 லட்சம்), திருச்சி (2.08 லட்சம்), சிவகங்கை (2.03 லட்சம்) ஆகிய மாவட்டங்கள் உள்ளன.

    பெயர் நீக்கப்பட்டவர்களில் 18 லட்சம் பேர் இறந்தவர்கள் பிரிவின் கீழ் வருகிறார்கள். சுமார் 2 ஆண்டுகளாக ஆதார் எண்ணை வழங்காதவர்களும் நீக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்கள் ஆதார் விவரங்களை அளித்தால் அவர்களை மீண்டும் உறுப்பினராக சேர்த்துக் கொள்வோம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தற்போது கூட்டுறவு சங்கங்களில் 1.46 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். சேலத்தில் அதிகபட்சமாக 10.8 லட்சம் பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அதை தொடர்ந்து திண்டுக்கல் (7.12 லட்சம்), கடலூர் (6.66 லட்சம்), திருச்சி (5.92 லட்சம்), கன்னியாகுமரி (5.68 லட்சம்) உள்ளனர்.

    மாநிலம் முழுவதும் 34,600 ரேசன் கடைகளை கூட்டுறவு சங்கங்கள் நடத்தி வருகின்றன. வாக்காளர் பட்டியல் திருத்திய பிறகு கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடைபெறும்.

    Next Story
    ×