என் மலர்
தமிழ்நாடு
2025 ஆங்கில புத்தாண்டு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்-தலைவர்கள் வாழ்த்து
- ஓயாது உழைப்போம்! பொற்கால ஆட்சியை தமிழ்நாட்டில் மீண்டும் அமைப்போம்! என இந்நாளில் சபதமேற்போம்.
- மக்கள் அனைவருக்கும் இந்தப் புத்தாண்டு, புதிய நம்பிக்கையையும், எழுச்சியையும், மலர்ச்சியையும், வளர்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும்.
சென்னை:
2025 ஆங்கில புத்தாண்டு இன்று நள்ளிரவு பிறக்கிறது. இதையொட்டி ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சாதனைகளை உச்சி முகர்ந்து அங்கீகரிக்கிறோம் எனக் கூறும் விதமாகத்தான் 2024 பாராளுமன்றத் தேர்தலில் "நாற்பதுக்கு நாற்பது" என இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வெற்றி மகுடம் சூட்டினர் நம் மக்கள். விடுதலை இந்திய வரலாற்றில் ஜனநாயகத்தை பாதுகாத்து-இந்நாட்டின் பெருமையை நிலைநாட்ட, தமிழ்நாடு மக்கள் அளித்த வெற்றிக்குரிய 2024-ம் ஆண்டு-மறக்க முடியாத ஆண்டாக அமைந்துவிட்டது.
சோதனைகள், தடங்கல்களைக் கடந்து சாதனைகள் படைக்கவும், வெற்றி பெறவுமான நம்பிக்கையினையும் உத்வேகத்தினையும் அளித்தது 2024-ம் ஆண்டு!
புத்தாண்டாகிய 2025-ல் உலகெங்கும் அமைதி திரும்பட்டும். நம் நாட்டில் சமூக நல்லிணக்கம் தழைத்துச் செழித்தோங்கட்டும். இல்லந்தோறும் அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கட்டும்! தமிழ்நாடு அதற்கு வழிகாட்டும்! அனைவருக்கும் எனது உளம் நிறைந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் அனைத்து நிலைகளிலும் வாழும் மக்கள் நிம்மதியான வாழ்க்கையை வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்துவதற்கு, நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்போம்!
ஓயாது உழைப்போம்! பொற்கால ஆட்சியை தமிழ்நாட்டில் மீண்டும் அமைப்போம்! என இந்நாளில் சபதமேற்போம்.
மக்கள் அனைவருக்கும் இந்தப் புத்தாண்டு, புதிய நம்பிக்கையையும், எழுச்சியையும், மலர்ச்சியையும், வளர்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அதுபோல திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் அன்புமணி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், திருநாவுக்கரசர் எம்.பி., விஜய் வசந்த் எம்.பி., சரத்குமார், அகில இந்திய காந்தி காமராஜ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் டாக்டர் பா.இசக்கிமுத்து, மாநில தலைவர் டாக்டர் ஆ.மணி அரசன், நமதுரிமை காக்கும் கட்சியின் பொதுச்செயலாளர் டாக்டர் செங்கை பத்மநாபன், சமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணன், டாக்டர் பால்தினகரன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.