search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னை மாநில கல்லூரியில் ரூ.21 கோடியில் விடுதி கட்டிடங்கள்- முதலமைச்சர் திறந்து வைத்தார்
    X

    சென்னை மாநில கல்லூரியில் ரூ.21 கோடியில் விடுதி கட்டிடங்கள்- முதலமைச்சர் திறந்து வைத்தார்

    • விடுதிக் கட்டிடங்களானது, சிறப்பு மாணவர்களுக்கு தனிக் கட்டிடமாகவும், சிறப்பு மாணவியருக்கு தனிக் கட்டிடமாகவும் கட்டப்பட்டுள்ளது.
    • 38 மாணவர் அறைகள் மற்றும் 32 மாணவியர் அறைகளுடன், 114 மாணவர்களும், 96 மாணவியர்களும் தங்கும் வசதியுடன் கட்டப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை மாநிலக் கல்லூரியில் 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 300-க்கும் மேற்பட்ட சிறப்பு மாணவ, மாணவியர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில் இருந்து இங்கே வந்து, தங்கிப் படித்துக்கொண்டிருக்கிறார்கள்.

    ஆனால் அவர்களுக்கு தேவையான வசதிகளுடன் கூடிய விடுதிகள் இல்லாத காரணத்தால், சிறப்பு மாணவ, மாணவியர்களுக்கான சிறப்பு வசதிகளுடன் மாநிலக் கல்லூரி வளாகத்திலேயே அவர்களுக்கு விடுதி அமைத்துத் தரப்படும் என்று கூறி இருந்தார்.

    அந்த அறிவிப்பிற்கிணங்க, சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் 21 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சிறப்பு மாணவர் மற்றும் மாணவியர் விடுதிக் கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றைய தினம் திறந்து வைத்தார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், விடுதிகளை திறந்து வைத்து பார்வையிட்ட பின், அங்கு தங்கியுள்ள சிறப்பு மாணவ, மாணவியர்களிடம், அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதா என்றும், வேறு என்ன வசதிகள் தேவை என்றும் வினவினர். அதற்கு அம்மாணவ, மாணவியர்கள் தேவையான வசதிகள் உள்ளது என்றும், விடுதியை அமைத்து தந்ததற்கு தங்களது நன்றியினையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொண்டனர்.

    இவ்விடுதிக் கட்டிடங்களானது, சிறப்பு மாணவர்களுக்கு தனிக் கட்டிடமாகவும், சிறப்பு மாணவியருக்கு தனிக் கட்டிடமாகவும் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டிடங்கள் தரை மற்றும் இரண்டு தளங்களுடன் 64,455 சதுர அடி கட்டிட பரப்பளவில் 38 மாணவர் அறைகள் மற்றும் 32 மாணவியர் அறைகளுடன், 114 மாணவர்களும், 96 மாணவியர்களும் தங்கும் வசதியுடன் கட்டப்பட்டுள்ளது.

    இச்சிறப்பு மாணவ, மாணவியருக்கான விடுதிகளின் அனைத்து தளங்களிலும் தொட்டுணரக்கூடிய வழிகாட்டும் மேற்பரப்பு குறிகாட்டிகளுடன் கூடிய தரை அமைப்பு, பார்வையற்ற சிறப்பு மாணவர்களுக்கான பிரெய்லி பலகைகள், அனைத்து அறையிலும் அவசர அழைப்பு மணி பொருத்தப்பட்டுள்ளது.

    நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு, கோவி. செழியன், மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், மாநகராட்சி நிலைக்குழுத் தலைவர் நே. சிற்றரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×