என் மலர்
தமிழ்நாடு
பெரியார் குறித்த சர்ச்சை பேச்சு: தமிழ்நாடு முழுவதும் சீமான் மீது 60 வழக்குகள் பதிவு
- அரசியல் கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
- சீமான் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், புதுச்சேரியில் பேட்டியளிக்கும் போது, தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
இதற்கு திராவிடர் கழகத்தினர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் திராவிடர் கழகத்தினர் சென்னையில் உள்ள சீமானின் வீட்டை முற்றுகையிடப்போவதாக அறிவித்த நிலையில் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.
இந்நிலையில் சர்ச்சை பேச்சு தொடர்பாக சீமான் மீது தமிழகம் முழுவதும் பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் சீமான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.
திண்டுக்கல்
நிலக்கோட்டை திராவிட கழக ஒன்றிய செயலாளர் ஜெயபிரகாஷ் தலைமையிலான நிர்வாகிகள் நிலக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண் பிரசாந்த்தை சந்தித்து புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசி வருகிறார். மக்கள் மத்தியில் தவறான கருத்தை பதிவு செய்து, அரசியல் லாப நோக்கத்திற்காக தரக்குறைவான அருவருக்கத்தக்க வகையில் பேட்டி அளித்துள்ளார்.
அது எங்கள் கட்சியினர் மத்தியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக சீமான் மீது வழக்குப் பதிவு செய்து, வலைதளங்களில் உள்ள பெரியார் குறித்து சீமான் பேசிய வீடியோவை அகற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல் திண்டுக்கல் பெரியார் சிலை அருகே பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் ஒன்று திரண்டு சீமானுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர்வலமாக சென்று திண்டுக்கல் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். அங்கு கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்தனர்.
நெல்லை
நெல்லை மாநகரில் தச்சநல்லூர் போலீஸ் நிலையத்தில் நேற்று திராவிடர் கழகத்தின் நெல்லை மாவட்ட செயலாளர் வேல்முருகன் புகார் அளித்தார். அதில் சீமான் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியிருந்தார்.
அந்த புகாரின் அடிப்படையில், சீமான் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 192 (கலவரத்தை ஏற்படுத்தும் விதத்தில் செயல்படுதல்), புதிய குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 352 (பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்) ஆகிய 2 பிரிவுகளின் கீழ் இன்ஸ்பெக்டர் முத்து கணேஷ் வழக்குப்பதிவு செய்துள்ளார்.
கோவை
சீமானை கண்டித்து தமிழகம் முழுவதும் திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிட கழகம், திராவிடர் விடுதலை இயக்கத்தினர் உள்பட பல்வேறு அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் தமிழகம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களில் புகாரும் அளிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி கோவையில் திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிட கழகம், உள்ளிட்ட 7 அமைப்புகள் சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தரிடம் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் பேரில் நாம்தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சுந்தராபுரம், போத்தனூர் ஆகிய போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், திராவிடர் விடுதலை இயக்கத்தின் மாநகர் மாவட்ட தலைவர் நிர்மல்குமார் தலைமையில் நிர்வாகிகள் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயனை சந்தித்து, பெரியார் குறித்து அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது உரிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு கொடுத்தனர்.
இந்த நிலையில் கோவையில் உள்ள தடாகம், பெரியநாய க்கன்பாளையம், பொள்ளாச்சி கிழக்கு, ஆனைமலை, மகாலிங்கபுரம், மேட்டுப்பாளையம் ஆகிய 6 போலீஸ் நிலையங்களில் சீமான் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவையில் சீமான் மீது மொத்தம் 8 போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சீமான் மீது இதுவரை கோவை, கடலூர், சேலம், மதுரை, தென்காசி, திருநெல்வேலி, திண்டுக்கல் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் சீமான் மீது 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சீமான் மீது போலீசில் புகார்கள் குவிந்து வருவதால், அவர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.